அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவால் இப்போது காற்சட்டை அணிந்து கொண்டு பாதையில் செல்ல முடிகின்றதா எனத் தெரியவில்லை.
நானாக இருந்தால் தற்போது ஒரு முறையல்ல, 10 முறையாவது என் பதவியை இராஜினாமா செய்திருப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.அத்தோடு, நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி, அதிக அதிகாரத்தால் பைத்தியக்காரராவார் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றையில்,
நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க முடியாவிட்டால், குறைந்த பட்சம் அடுத்தமுறை அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர் களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவேண்டும். அவ்வாறில்லாது இந்த பயணத்தில் தொடர்ந்து பயணிக்க முடியாது. தனியொருவருக்கு முழு அதிகாரத்தையும் கொடுப்பது ஆபத்தானது. இது மிக ஆபத்தான அதிகாரங்கள்.
ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாது என அன்று ஜே.ஆர்.ஜயவர்தன கூறினார். ஆனால், இன்றுள்ள அதிகாரத்தைக் கொண்டு அதனையும் செய்யமுடியும். இவ்வாறான அதிகாரம்கொண்ட ஜனாதிபதி பைத்தியக்காரராவார். மூளை மலிவடைந்து, தனக்கு தேவையானவரை மாத்திரம்கொண்டு ஆட்சியை முன்னெடுப்பதற்கு முயற்சிப்பார். யாரிடமும் ஆலோசனை கேட்கமாட்டார். நானே அதிகாரம் படைத்தவன் என நினைப்பார்.
ஆகவே, இந்த அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். அப்போது எங்களால் மாற்றமொன்றை ஏற்படுத்த முடியும். இன, மதங்களை மறந்து எதிர்வரும் சந்ததியினரை பற்றி சிந்தித்து ஒரு முடிவை எடுக்கவேண்டும்.
மக்கள் புரட்சி ஏற்பட்டு ஜனாதிபதியை மாற்றினாலே தவிர, தற்போதுள்ள அதிகார முறைக்கு அமைய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்ய முடியாது. விமல் வீரவன்சவின் தரப்பினரும் மைத்ரிபால சிறிசேனவின் தரப்பினரும் அரசாங்கத்திலிருந்து வெளியேறினாலும் அரசாங்கத்துக்கு 120இற்கும் அதிகமான ஆசனங்கள் இருப்பதால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. சட்டத்தின்படி 2024ஆம் ஆண்டே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். 2024ஆம் ஆண்டு நடத்தப்படும் தேர்தலுக்கு தற்போதிருந்து குழப்பமடைவதில் அர்த்தமில்லை. அந்த காலப்பகுதி வரை நாங்கள் உயிரோடு இருப்போமா என்பதே தெரியாது. ஆகவே, 2023, 24ஆம் ஆண்டு வரும் போது, பொதுமக்களே சிறந்த நபரொருவரை பொது வேட்பாளராக தெரிவுசெய்வார்கள். அதுவரை நாங்கள் அமைதியாக இருக்கவேண்டும். ஆனால், 50 வீதமான புதிய முகங்களை அடுத்த முறை தெரிவுசெய்வார்கள்.
இன்று மஹிந்தானந்த அளுத்கமகேவால் காற்சட்டை அணிந்துகொண்டு பாதையில் செல்ல முடியுமா எனத் தெரியவில்லை. அவருக்கு எதிராக எரிக்கும் உருவப்பொம்மைகளை பார்த்தும் பாதையில் செல்ல வெட்கமில்லையா? நானாக இருந்தால் தற்போது ஒரு முறையல்ல, 10 முறையாவது என் பதவியை இராஜிநாமா செய்திருப்பேன்.
அதேபோன்று வரலாற்றில் இதுவரை யாருக்கும் இடம்பெறாது அவமானங்கள் ஜனாதிபதி கோட் டாபய ராஜபக்ஷவிற்கு இடம்பெறுகின்றன. ஒவ்வொரு போராட்டங்களிலும் அவருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
எதிர்வரும் காலங்களில் பொருளாதார பாரிய வீழ்ச்சியை சந்திக்கும். இந்த நாட்டை அமெரிக்காவுக்கு தொடர்புடையவர்களே நாட்டை ஆட்சிசெய்வார்கள். 69 இலட்சம் மக்களை ஏமாற்றியுள்ளனர். இது இறைவனின் சாபமாகும். இந்த சாபமே இந்த அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கின்றது. இது எங்கு போய் முடியும் எனத் தெரியாது – என்றார்.