இந்தியாவில் மின்னணு வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், டாடா என முக்கிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் சார்ஜ் நிலையங்களை அதிக அளவில் நிறுவ திட்டமிட்டுள்ளது.
வாகன போக்குவரத்தின் அடுத்த கட்ட பரிமாணமாக எலட்ரிக் வாகனங்களின் வருகை பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் அறிவியலின் நவீன வளர்ச்சியால் போக்குவரத்து வாகனங்கள் பெட்ரோல் அல்லது டீசலை பயன்படுத்தி இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், சுற்றுச்சூழல் மாறுபாடு, குறைந்து வரும் பெட்ரோல் வளம் உள்ளிட்ட காரணங்களால் மாற்று எரிபொருள் பயன்பாடு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மின்சக்தி வாகனங்களின் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றது.
இந்தியாவில் மின்வாகனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. அதனால், அவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளதாகவும், பெட்ரோல், டீசல் நிரப்பும் மையங்கள் போல் வாகனங்களுக்கு மின் சக்தியை செலுத்த,
எலக்ட்ரிக் சார்ஜ் மையங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் எண்ணெய் நிறுவனம், அடுத்த சில ஆண்டுகளில் பத்தாயிரம் எலட்ரிக் சார்ஜ் மையங்களை அமைக்க திட்டமிட்டு, பணிகளை முடுக்கி விட்டுள்ளது. மற்றொரு பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்பரேசனும் ஏழாயிரம் எலக்ட்ரிக் சார்ஜ் மையங்களை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. டாடா பவர் நிறுவனமும் பத்தாயிரம் எலக்ட்ரிக் சார்ஜ் மையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.
வரும் மாதங்களில், மேலும் பல பொதுத்துறை மற்றும் பெரிய தனியார் நிறுவனங்களும், எலக்ட்ரிக் சார்ஜ் மையங்கள் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்திக்கு அரசு வழங்கும் சலுகைகளை எலக்ட்ரிக் சார்ஜ் நிலையங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.