எதிர்வரும் நத்தார் பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் தேவையை சந்தையில் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால், பண்டிகைக் காலத்தில் காய்கறிகளின் விலைகள் தற்போதைய விலையை விட அதிகரிக்கலாம் என நுவரெலியா காய்கறி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வரும் பண்டிகை காலத்துக்காக கரட், கோவா, லீக்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல வகையான காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள நிலையில், இரசாயன உரங்களை பயிருக்கு சேர்க்காததால் காய்கறிகளின் விளைச்சல் வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது. சில மரக்கறிகள் அழிவடைந்துள்ளதாக நுவரெலியா விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
காய்கறிப் பண்ணைகளில் தினமும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வந்த நிலையில் தற்போது வேலையிழந்து காய்கறி உற்பத்தியைக் கைவிட்டு வேறு தொழிலில் ஈடுபடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக காய்கறி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக நுவரெலியா பிரதேசத்தில் பல காய்கறி விவசாயிகள் காய்கறிச் செய்கையிலிருந்து விலகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.