Our Feeds


Saturday, November 6, 2021

ShortNews Admin

அலி சப்ரியின் இராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த ஜனாதிபதி? - உள்ளே என்ன நடந்தது?



அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக கூறி, நீதியமைச்சர் அலி சப்ரி கையளித்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்க மறுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.


ஒரு நாடு – ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிமக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து,
அலி சப்ரி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் நீதியமைச்சர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதியிடம் நேற்று கையளித்திருந்தார்.

எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அலி சப்ரியின் பதவி விலகல் கடிதத்தை ஏற்கவில்லை என அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் அலி சப்ரி, சட்டங்களை உருவாக்க நாட்டில் உரிய நடைமுறைகள் இருக்கும் போது, இப்படியான செயலணிக்குழுவின் மூலம் சட்டத்தை உருவாக்குவது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நியமனம் குறித்து தனக்கு தெளிவில்லை எனவும் நீதியமைச்சர், ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

இதன் போது கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, இந்த விடயம் தொடர்பில் தான் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவே ஜனாதிபதி செயலணிக்குழுவை நியமித்ததாகவும் வேறு விடயங்களுக்காக அல்ல எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் சட்டங்களை உருவாக்கும் போது கட்டாயம் நீதியமைச்சரின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி, அலி சப்ரியிடம் தெரியப்படுத்தியுள்ளார். மேலும் அமைச்சர் அலி சப்ரியின் பணிகளை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

அத்துடன் ஞானசார தேரரின் நியமனம் சம்பந்தமாக சிலர் தவறாக புரிந்துக்கொண்டுள்ளதாகவும் அந்த எண்ணத்தை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. - தமிழன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »