Our Feeds


Monday, November 15, 2021

ShortNews Admin

மீண்டும் களத்திற்கு வந்தார் அம்பிட்டிய தேரர்: பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு தேரர் ஆர்ப்பாட்டம் - தேரருக்கு எதிராக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.



(மட்டு.சோபா, வ.சக்திவேல்)


மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில் தேரரை அங்கிருந்து வெளியேற்றக்கோரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன் காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியதுடன் அப்பகுதியில் பதற்ற நிலைமையும் ஏற்பட்டது.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவின்கெவுளியாமடு கிராமத்தில் அமைந்துள்ள விஹாரைக்கு முன்பாகவுள்ள பொதுமக்களின் குடியிருப்புக்களை அகற்றி தனக்கு காணிகளை வழங்கவேண்டும் என பட்டிப்பளை பிரதேச யெலாளரிடம் தேரர் கோரிக்கை விடுத்தார்.

இருப்பினும் குறித்த காணி தொடர்பான உரிமம் பிரதேச செயலாளரிடம் இல்லையெனவும் வன இலாகாவிடமே உள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தும் தனக்கு காணியை வழங்கவேண்டும் என கூறி கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுடன் பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குள் போராட்டத்தை நடத்திய தேரர் அதனை தொடர்ந்து பிரதேச செயலாளரின் அறைக்குள் சென்றும் வாயிற் கதவிலிருந்து போராட்டத்தை முன்னெடுத்தார்.

இதனை தொடர்ந்து பொலிஸார் குறித்த தேரருடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்யமுற்சித்தபோதிலும் அவர் தொடர்ச்சியாக பிரதேச செயலக பிரதேச செயலாளரையும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களையும் திட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது குறித்த காணியானது தனது அதிகாரத்துக்குள் இல்லையெனவும் வனபரிபாலன திணைக்களத்துக்குச் சொந்தமான காணியொனவும் பிரதேச செயலாளரினால் கடிதம் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த தேரர் அங்கிருந்து சென்றார்.

இதேவேளை பிக்குவின் செயற்பாட்டைக் கண்டித்து பிரதேச செயலகத்துக்கு முன்பாக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பிளாந்துறை-பட்டிப்பளை பிரதான வீதியை மறித்து உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கிருந்து தேரர் சென்றதும் ஊழியர்களும் தமது போராட்டத்தினை கைவிட்டு கடமைக்கு திரும்பியிருந்தனர்.

எனினும் அரசாங்க உத்தியோகத்தர்களின் கடமைகளை செய்யவிடாது தடுத்தமை தொடர்பில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மீது பொலிஸார் நடவடிக்கையெடுக்க வேண்டும் என பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »