மன்னாரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் யுத்தகாலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் தங்கத்தை தேடி அகழ்வு நடவடிக்கையை முன்னெடுத்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று(13) மாலை காவல்துறையினரும் 4 ஆவது படைப் பிரிவினரும் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் ஓலைத்தொடுவாய் காப்புக்காட்டில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் தங்கத்தை தேடும் நோக்கில் குழுவொன்று அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் காவல்துறையிருக்கு தகவல் கிடைத்ததையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது ஆறு சந்தேக நபர்களுடன் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட மகிழுந்து, மின்பிறப்பாக்கி உள்ளிட்ட உபகரணங்களைக் காவல்துறையினர் கைப்பற்றினர்.
ஹெட்டிமுல்ல, கொட்டியாகும்புர, பாணந்துறை, பொரலந்த மற்றும் ஹல்பே பிரதேசங்களைச் சேர்ந்த 26 முதல் 60 வயதுக்கிடைப்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று(14) மன்னார் நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.