சீனாவில் பிறப்பு விகித வளர்ச்சி சரிந்து வரும் நிலையில், அங்கு திருமணங்களும் குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில் இந்தாண்டின் மக்கள் தொகை புள்ளி விபர அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சீனாவில் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக திருமணங்கள் நடப்பது குறைந்துள்ளது. கடந்த, 17 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்தாண்டு திருமணங்கள் குறைந்துள்ளன.
இந்தாண்டு ஜனவரி தொடக்கம் மார்ச் வரை 58 லட்சத்து 70,000 திருமணங்கள் நடந்துள்ளன. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் நடந்ததை விட குறைவு.கடந்த, 1978ஆம் ஆண்டுக்குப் பின் 2020இல் பிறப்பு விகித வளர்ச்சி முதன் முறையாக, 1 சதவீதத்திற்கும் குறைவாக, 0.85 சதவீதம் என்ற அளவிற்கு சரிவடைந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
சீன அரசு, 80களில் ‘நாம் இருவர், நமக்கு ஒருவர்’ கொள்கையை அமல்படுத்தியது. இதனால் சீனாவில் இளையோர் எண்ணிக்கை குறைந்தது. இதையடுத்து, 2016இல் ‘நாம் இருவர்,நமக்கு இருவர்’ என கொள்கையை மாற்றி, தம்பதிக்கு பல சலுகைகளை அறிவித்தது. எனினும், மக்கள் தொகை வளர்ச்சி 141 கோடி என்ற அளவில் மிதமாகவே இருந்தது.
இதையடுத்து சீனா ‘நாம் இருவர், நமக்கு மூவர்’ என்ற திட்டத்தை அறிவித்து மூன்று குழந்தைகளை பெறுவோருக்கு வீடு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சலுகைகளை வழங்குகிறது. இருந்த போதிலும், அதிகரித்து வரும் வளங்களுக்கான விலை, கல்விக் கட்டண உயர்வு போன்ற வாழ்க்கைச் செலவினங்களுக்கு அஞ்சி, மக்கள் அதிக குழந்தைகள் பெறுவதை தவிர்க்கின்றனர்.
இதே காரணங்களை திருமணங்கள் குறைவதற்கும் கூறலாம் என்கிறார் ஆய்வாளர் ஹீ யாபூ.அதுமட்டுமின்றி, அதிக வேலைப் பளு, அதிகம் படித்த பெண்கள், பொருளாதார சுதந்திரம் போன்றவற்றாலும் இளைஞர்கள் திருமணத்தில் ஆர்வமின்றி இருக்கின்றனர்.