2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்படும் என
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்தார்.அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுக்கான விலை சூத்திரத்தின் விளைவாக இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் என்றார்.
புகைபிடிப்பதை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒரு விலை சூத்திரம் முன்வைக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்றும் கூறினார்.
இதன்படி, சிகரெட் ஒன்றின் விலை 5ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் ஐந்தாண்டுகளில் 20 ரூபாயால் விலை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
தங்களால் தயாரிக்கப்பட்ட விலைச்சூத்திரம் சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு நாளில் 60 க்கும் மேற்பட்ட நபர்கள் புகைபிடிப்பதால் இறக்கின்றனர், அதே நேரத்தில் ஒரு வருடத்தில் 22,000 உயிர்களை நாங்கள் இழக்கிறோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.