Our Feeds


Tuesday, November 2, 2021

SHAHNI RAMEES

அமைச்சுப்பதவிகளைத் துறந்து, அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கவேண்டும்.


 (நா.தனுஜா)


கெரவலப்பிட்டி யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர்கள் ஒன்றிணைந்து நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளனர். 


உண்மையில் எதிர்ப்பை வெளியிடுவதாயின், அவர்கள் தமது அமைச்சுப்பதவிகளைத் துறந்து அரசாங்கத்தைவிட்டு வெளியேறி, அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கவேண்டும்.


ஆனால் தற்போது அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு எதிர்ப்பை வெளியிடுபவர்கள் எவரும் இன்னமும் அமைச்சுப்பதவிகளைக்கூடக் கைவிடவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.


கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில்  திங்கட்கிழமை (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


 அங்கு அவர் மேலும் கூறியதாவது,


நாட்டுமக்களால் 'கறுப்புப்பட்டியலில்' சேர்க்கப்பட்டிருக்கும் தற்போதைய அரசாங்கம், அதன் அண்மைக்கால செயற்பாடுகளால் சர்வதேசத்தின் மத்தியில் நாட்டிற்கும் மக்களுக்கும் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கின்றது.


எமது நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக அரச வங்கியொன்று வெளிநாட்டு தனியார் நிறுவனமொன்றுடனான கொடுக்கல், வாங்கலுக்காக கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. 


இதுகுறித்துப் பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாடு தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இறக்குமதி செய்யப்படும் உரத்தின் தரம் தொடர்பில் உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு முன்பதாக கடன் தவணைக் கடிதத்தை விநியோகிப்பதற்கு உத்தரவிட்டது யார் என்பதை நாட்டுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தவேண்டும்.


வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரத்தை நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு முன்னர் அதுகுறித்து இலங்கை தேசிய தாவரவியல் பரிசோதனை மையத்திடம் அனுமதி பெறப்படவேண்டும். இவ்விடயம் தொடர்பில் விவசாயத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளால் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களே வெளியிடப்படுகின்றன.


குறிப்பாக உரம் தொடர்பான பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்னரேயே எதற்காகக் கடன் தவணைக் கடிதம் விநியோகிக்கப்பட்டது? என்று ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு, நாட்டிலுள்ள இருபெரும் உர நிறுவனங்களும் விரைவில் கடன் தவணைக் கடிதத்தை வெளியிடுமாறு கோரியதாக மக்கள் வங்கியின் அதிகாரி பதிலளித்திருக்கின்றார். நாமறிந்த வரையில் மேற்கூறப்பட்ட இரண்டு உர நிறுவனங்களும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோரது அமைச்சுக்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.


அதுமாத்திரமன்றி கடன் தவணைக் கடித விநியோகத்தின்போது அதற்குரிய நிபந்தனைகள் எவையும் வெளியிடப்படவில்லை. அரசாங்கத்தின் இத்தகைய முறையற்ற செயற்பாடுகள் தற்போது இராஜதந்திர ரீதியான பிரச்சினைகள் தோற்றம் பெறுவதற்கு வழிவகுத்துள்ளன.


அதேவேளை இவ்விவகாரத்தில் மூன்றாம் தரப்பின் ஊடாக மீண்டும் உரம் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என்று சீனா கூறுகின்றது.


அதுமாத்திரமன்றி கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவைச் செலுத்தாமையினால் மக்கள் வங்கியைக் கறுப்புப்பட்டியலில் சேர்ப்பதாக சீனா அறிவித்திருக்கின்றது. மக்கள் வங்கி என்பது சாதாரண மக்களால் சிறுகச்சிறுக சேகரிக்கப்பட்ட பணத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட அரச வங்கியாகும். 


அவ்வாறிருக்கையில் உரிய நடைமுறைகளுக்குப் புறம்பாக, நாட்டிற்குள் உரத்தைக் கொண்டுவருவதற்கு தேசிய தாவரவியல் பரிசோதனை மையத்தின் அனுமதியைப் பெறுவதற்கு முன்னதாக, கடன் தவணைக் கடிதத்தை விநியோகித்து மக்கள் வங்கி கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள சட்டநடவடிக்கை என்ன? என்பது குறித்து அரசாங்கம் நாட்டுமக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும்.


மறுபுறம் அத்தியாவசியப்பொருட்களின் சடுதியான விலையேற்றத்துடன் வாழ்க்கைச்செலவு வெகுவாக அதிகரித்திருப்பதன் காரணமாக அண்மைக்காலத்தில் மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.


அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதைக் கிராமங்கள்தோறும் முன்னெடுக்கப்படக்கூடிய விவசாயிகளின் போராட்டங்கள் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிகின்றது. 


இதுஇவ்வாறிருக்கையில் இந்தியாவிலிருந்து திரவ நனோ நைட்ரஜன் உரம் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள போதிலும், இன்னமும் அதுகுறித்து உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் அதுபற்றி செய்தி வெளியிட்ட சிங்களப்பத்திரிகையொன்றின் ஆசிரியரிடம் மாத்திரம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 


மறுபுறம் திரவ நனோ நைட்ரஜன் உரத்தின் பயன்பாடு தொடர்பில் உரியவாறான பரிசோதனைகளை மையப்படுத்திய ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டும்.


அடுத்ததாக 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை தொடர்பான சட்டவரைபைத் தயாரிப்பதற்கென புதிதாக ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக மட்டுமீறிய அதிகாரங்களைக்கொண்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையையும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் நீதிக்கட்டமைப்பையும் பொலிஸ் மற்றும் இராணுவம் உள்ளடங்கலாக பாதுகாப்புத்தரப்பையும் அரச அதிகாரிகளையும் பயன்படுத்தி 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யமுடியாத அரசாங்கம், அதற்கெனத் தற்போது விசேட ஜனாதிபதி செயலணியை ஸ்தாபித்திருக்கின்றது.


அதேபோன்று ஜனாதிபதியின் 'வியத்மக' கோட்பாடு இப்போது என்ன நிலையில் இருக்கின்றது என்பதை மக்கள் நன்கறிந்திருப்பார்கள். அனைத்துத்துறைகளிலும் புத்திஜீவிகளை உள்வாங்கி, அவர்கள்மூலம் நாட்டைக் கட்டியெழுப்பப்போவதாகக்கூறிய அரசாங்கம், தற்போது அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டும் புத்திஜீவிகளை அவர்களுக்குரிய பதவிகளிலிருந்து நீக்கிவருகின்றது. 


இவ்வனைத்து விடயங்களையும் அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், நிறைவேற்றுவதாக ஏற்கனவே வாக்குறுதியளித்த அனைத்திற்கும் மாறாக அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது என்பது தெளிவாகின்றது. இதற்கு எதிராக அமைச்சரவை அமைச்சர்கள், தொழிற்சங்கவாதிகள், பொதுமக்கள் என அனைத்துத்தரப்பினரும் ஒன்றுதிரண்டுள்ள நிலையில், அவர்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதன் ஊடாகப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஆயத்தங்களில் அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது.


அதுமாத்திரமன்றி அமைச்சரவை அனுமதியின்றி கெரவலப்பிட்டி யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளியிட்டு நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளனர். உண்மையில் அவர்கள் எதிர்ப்பை வெளியிடுவதாயின், அரசாங்கத்திலிருந்து வெளியேறி தமது நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. 


ஆனால் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு அதன் செயற்பாடுகளை விமர்சிப்பவர்கள் இன்னமும் அமைச்சுப்பதவிகளைக் கைவிடவில்லை.  எதுஎவ்வாறிருப்பினும் அண்மைக்காலத்தில் அரசாங்கத்திற்குள் பிளவு ஏற்பட்டிருப்பது வெளிப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் எமது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை மேலும் பலப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 


எதிர்வரும் இருமாதகாலத்திற்குள் கிராமிய மற்றும் நகரமட்டத்தில் எமது கட்சி அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டு, பலப்படுத்தப்படும். அதேபோன்று ஒவ்வொரு துறைசார்ந்த கொள்கைகளை உருவாக்குவதற்கென கட்சிக்குள் 'கொள்ளை உருவாக்கக்குழு' நிறுவப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »