Our Feeds


Wednesday, November 3, 2021

SHAHNI RAMEES

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் | நாம் குற்றவாளிகளை தண்டிப்போம்.


 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஒரு இலட்சத்து 12 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆராயப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாலபேயில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை திறந்துவைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துவெளியிடுகையில்,

அமெரிக்காவிலுள்ள உலக வர்த்தக மையத்தின் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அதன் பிரதான சூத்திரதாரியான ஷேக் மொஹமட் என்பவருக்கு எதிராக 20 வருடங்களின் பின்னரே வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. அதுபோன்று 2005 ஆம் ஆண்டு பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சூத்திரதாரிகள் மீது ஏழு வருடங்களின் பின்னரே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவருடைய கருத்துகளை வெளியிடுகிறார். அவர் கிறிஸ்தவ மக்களின் மதத் தலைவர் என்பதால் அந்த கருத்துகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனபோதிலும், நாம் குற்றவாளிகளை தண்டிப்போம். இப்போது ஐந்து மேல் நீதிமன்றங்களில் 32 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு இலட்சத்து 12 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. நாம் விசாரணைகளை நடத்தியிருக்கிறோம்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட குழுக்களின் அறிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விடுதலையாகுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. நிச்சயமாக தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்றார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »