புகழ்பெற்ற முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்ட வரலாற்றுப் பள்ளிவாயலான டெல்லி ஜமா மஸ்ஜிதில் புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பினை நிரந்தரமாக காட்சிப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை - இந்திய மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதுடெல்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
இதற்மைய, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் வெளியிடப்பட்ட திருக்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவினால் இந்தியாவின் தலைமை இமாம் மற்றும் டெல்லி ஜமா மஸ்ஜித் ஷாஹி இமாம் சையத் அஹமட் புகாரியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த திருக்குர்ஆன் பிரதி வெளிப்படையான காட்சிப் பெட்டியில் பொருத்தப்பட்டு, பள்ளிவாயலின் முக்கியமானதொரு இடத்தில் வைக்கப்பட்டது. திருக்குர்ஆனின் சிங்களப் பதிப்பை நிரந்தரக் காட்சிக்கு வைப்பதற்கு முன்னதாக, இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் ஷாஹி இமாம் சையத் அஹமட் புகாரி ஆகியோர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இஸ்லாமிய உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.
இலங்கை மக்களின் நல்லெண்ணம் மற்றும் நட்பின் இந்த சைகையைப் பாராட்டிய ஷாஹி இமாம், இலங்கை ஒரு முற்போக்கான நாடு என்பதை சுட்டிக்காட்டினார்.
சாத்தியமான பரிமாற்றத் திட்டத்திற்காக இந்தியாவில் இருந்து முக்கிய இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் பிரமுகர்களை அடையாளம் காண்பதற்காக இமாம் புகாரியின் உதவியை உயர்ஸ்தானிகர் மொரகொட கோரினார்.
இமாம் புகாரி மற்றும் டெல்லி ஜமா மஸ்ஜித் ஆகியவற்றுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு இலங்கை இஸ்லாமியப் பிரமுகர்களை ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முகலாயக் கட்டிடக்கலை அம்சங்களால் அலங்கரிக்கப்பட்ட மிகவும் அழகிய இந்தப் பள்ளிவாயலை இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கு இமாம் சுற்றிக் காட்டினார்.
டில்லியின் ஜமா மஸ்ஜித் என்று பொதுவாக அறியப்படும் மஸ்ஜித்-ஐ ஜஹான்-நுமா, இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாயல்களில் ஒன்றாகும். 1650 மற்றும் 1656க்கு இடையில் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாயல், அதன் முதல் இமாம் சையத் அப்துல் கஃபூர் ஷா புகாரியால் திறந்து வைக்கப்பட்டது.
முன்னாள் முகலாயத் தலைநகரான ஷாஜஹானாபாத்தில் (இன்று பழைய டெல்லி) அமைந்துள்ள இது 1857 இல் பேரரசு மறையும் வரை முகலாயப் பேரரசர்களின் ஏகாதிபத்தியப் பள்ளிவாயலாக செயற்பட்டது. இந்தப் பள்ளிவாயலில் 40,000 பக்தர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபடலாம்.