விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் பொகவந்தலாவையில் இன்று (07) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு கடன் கொடுத்தன. அந்நாடுகள் பொருளாதாரத்தை முகாமை செய்யவில்லையா? அப்படியானால் எமது நாட்டு அரசுக்கு மட்டும் ஏன் தடுமாற்றம்?
தேசிய உற்பத்தியில் புரட்சி செய்யபோவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். மஞ்சளுக்கு தடை விதிக்கப்பட்டது. நாட்டில் தற்போது மஞ்சள் இருக்கின்றதா? பாசி பயறு, உளுந்து உள்ளிட்ட பொருட்களும் இல்லை. அரசு தோல்வி கண்டுள்ளது.
விவசாய அமைச்சரின் மட்டுமல்ல இராஜாங்க அமைச்சரின் கொடுப்பாவியையும் எரிக்க வேண்டும் என்கின்றனர். இவ்விருவரின் மட்டுமல்ல ஒட்டு மொத்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு அனுப்பவேண்டும்.
எமது பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வேண்டும். யாரோ பெத்த பிள்ளைக்கு, யாரோ பெயர் வைப்பதுபோல தமிழ் முற்போக்கு கூட்டணியால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு சிலர் இன்று பெயர் வைக்கின்றனர் என்றார்.
-மலையக நிருபர் கிரிஷாந்தன்-