அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம்

இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல என்பதை நாட்டு மக்கள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும் .

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையை தேசிய மட்டத்தில் தீர்மானிக்கவும்,கட்டுப்படுத்தவும் முடியது.

பருப்பின் விலையை காட்டிலும் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பயறினை குறைந்த விலையில் வழங்குவது அரசாங்கத்தின் இலக்காகும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் இலங்கைக்கு மாத்திரம் வரையறுத்தது அல்ல என்பதை நாட்டு மக்கள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கு பெருமளவில் கேள்வி எழுந்துள்ளது.

சர்வதேச சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரிக்கிறதே தவிர குறைவடையவில்லை.கப்பல் போக்குவரத்து கட்டணம்,பொருள் கொள்கலன் கட்டணம் கடந்த காலங்களை காட்டிலும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

எமது தேவைக்கேற்ப அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை காண்படுகிறது உதாரணமாக 100 கொள்கலன் அரிசி இறக்குமதிக்கு கோரினால் 50 கொள்கலன்கள் மாத்திரமே கிடைக்கப் பெறுகிறது.பல்வேறு காரணிகளினால் கொள்கலன்களுக்கான கேள்வி தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

 இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையை தேசிய மட்டத்தில் தீர்மானிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியாது.

தேயிலை, இறப்பர் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன அப்பொருட்களின் விலையை கூட இறுதி நிலையில் தீர்மானிக்கும் தன்மை எமக்கு கிடையாது.

நெருக்கடியான சூழ்நிலையில் அரிசி,சீனி,உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் லங்கா சதொச விற்பனை நிலையத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சதொசவில் பச்சை அரிசி ஒருகிலோகிராம் 98 ரூபாவிற்கும்,சுபிரி நாடு அரிசி ஒருகிலோகிராம் 99 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தனியார் தரப்பினருக்கும் அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இறக்குமதி செய்யப்படும் அரிசியை 100 ரூபாவிற்கும் குறைவான விலையில் வழங்குவது பிரதான இலக்காகும்.

இறக்குமதி செய்யப்படும் ஒருகிலோகிராம் பருப்பு 240 ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பயறுக்கான கேள்வி அதிகரிக்கப்பட்டுள்ளன.தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பயறினை விவசாயிகளிடமிருந்து 450 ரூபாவிற்கு பெற்று சதொசவில் 225 ரூபாவிற்கு விற்பனை செய்கிறோம்.பருப்பினை காட்டிலும் பயறின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என்றார்.