பொது மக்களின் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்ட “கல்யாணி பொன் நுழைவாயில்” (Golden Gate Kalyani) இன்று பி.ப. 3.00 மணி முதல் மக்கள் தமது வாகனங்களில் பயணங்களை மேற்கொள்ளலாம் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் முதலாவது அதிநவீன தொழில்நுட்ப கேபிள் தங்கும் பாலமான புதிய களனி பாலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்ற மற்றும் வெளியேறுகின்ற வாகனங்கள் காரணமாக, களனிப் பாலத்தில் ஏற்படுகின்ற அதிக வாகன நெரிசலுக்குத் தீர்வாக, இந்தப் புதிய மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் பங்களிப்புடன் - 2012 ஆம் ஆண்டில் இதற்கான அடிப்படைத் திட்டம் தயாரிக்கப்பட்டு - 2013 ஆம் ஆண்டு சாத்தியவள ஆய்வுகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் - நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கான அமைச்சரவை அனுமதி - 2014ஆம் ஆண்டில் கிடைத்தது.
அந்த ஆண்டிலேயே இதற்குரிய உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது.
இந்த திட்டம் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய வீடுகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான காணிகள் என்பன வேறு இடங்களில் வழங்கப்பட்ட பின்னர் - 2017ஆம் ஆண்டில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த அபிவிருத்தித் திட்டத்துக்கு, 55,000 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதோடு, இப்பணியை நிறைவு செய்வதற்கு, நான்கு வருடகாலம் தேவைப்பட்டது.
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை நுழைவிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம் வரையான 06 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து ஒருகொடவத்தை மற்றும் இங்குறுகடைச் சந்தி வரை 04 வழித்தடங்கள், இந்தப் புதிய மேம்பாலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், இங்குறுகடைச் சந்தியிலிருந்து கொழும்புத் துறைமுகநகர் வரையும் ஒருகொடவத்தையிலிருந்து அத்துருகிரிய வரையிலும் - தூண்களின் மேல் அமைக்கப்படுகின்ற அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
களனி ஆற்றின் நீர் வடிந்தோடலுக்கு எவ்விதத் தடையையும் ஏற்படுத்தாத வகையில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டிருப்பதும், சுற்றாடலின் அழகைப் பாதுகாக்கும் வகையில் கொபோநீலம், எசல (திருக்கோனை), மாராமரம், இலுப்பை, கும்புக்கன் உள்ளிட்ட மரங்கள் இப்பாதையின் இரு மருங்கிலும் நடப்பட்டிருப்பதும் - சிறப்பம்சமாகும்.
“கல்யாணி பொன் நுழைவாயில்” திறப்பு நிகழ்வில் மஹா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், தூதுவர்கள், வெளிநாட்டுப் பிரமுகர்கள், அமைச்சரவையின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள், அதிதிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.