பன்னிப்பிட்டிய - கொட்டாவ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கொட்டாவ பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தினால் குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் வீட்டில் வசிக்கும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நவம்பர் 04 ஆம் திகதி வெலிகம கப்பரதொட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூவர் காயமடைந்தனர்.
நவம்பர் 16 ஆம் திகதி, இரத்தினபுரியில் உள்ள உணவகம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும், விசாரணைகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையே சம்பவத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
நவம்பர் 20 ஆம் திகதி, கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.