சர்வதேச ஒத்துழைப்பும், அதற்கான வேலைத்திட்டமும், மனித உரிமைகளை பலப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.
ஆனால் இந்த அரசாங்கத்தின் ஆட்சியல் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி மட்டுமல்ல வறுமையின் பக்கம் நாடு பயணிக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார்.
காலஞ்சென்ற முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை தமது நினைவுக்கு வருவதாகவும், அவர் மிகச் சரியான கொள்கையில் முறையான திட்டங்களை கொண்டு வந்தார் என்பதையும் அவர் சபையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை(17) ,அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஒரே நாடு ஒரே சட்டம் என கூறினாலும் இந்த நாட்டில் இல்லாமல் போயுள்ளது இந்த விடயமேயாகும். மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டது.
உரம் தருவதாக கூறினார்கள், கடன்கள் கிடைக்கும் என்றனர் இன்று சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கையில் இன்று மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்ச மட்டுமல்ல வறுமையின் பக்கம் நாடு பயணிக்கின்றது.
நிதி அமைச்சருக்கு ஏழு மூளைகள் இருப்பதாக கூறினார்கள், அரசியல் அமைப்பையும் மாற்றி அதிகாரத்தை கைப்பற்றினர். அவ்வாறான நிலையில் இன்று முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் மோசமான,தோல்வி கண்ட வரவு செலவு திட்டம் என்றே நாம் கூறுவோம். இந்த வரவு செலவு திட்டத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. சட்ட விரோதமாக பல விடயங்களை இந்த வரவு செலவு திட்டத்தில் நிதி அமைச்சர் முன்வைத்துள்ளார்.
சட்டம் இயற்றும் சபையில் இருந்துகொண்டு நாட்டின் சட்டத்தை மீற அனுமதிக்க முடியாது. ஆகவே ஒருபோதும் இந்த வரவு செலவு திட்டத்திற்கு எமது ஆதரவு கிடைக்காது.
நாட்டின் பொருளாதாரம் இறுதி மூச்சை பிடித்துக்கொண்டுள்ளது. நாட்டின் வரியை மேலும் 45 வீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்வாறு வரிகளை சுமத்தி நாட்டை கொண்டு செல்ல முடியாது. எனவே வரவு செலவு திட்ட யோசனைகளை மீண்டும் கருத்தில் கொண்டு திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும்.
இந்த நேரத்தில் காலஞ்சென்ற மங்கள சமரவீர எமது நினைவுக்கு வருகின்றார். மிகச் சரியான கொள்கையில் முறையான திட்டங்களை கொண்டு வந்தார் என்பதை நினைவுபடுத்த வேண்டும்.
எனினும் இந்த அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இலக்கை அடைவதென்றல் ஆச்சரியம் இடம்பெற வேண்டும். அதியசம் ஏதும் நடந்தால் மட்டுமே இது சாத்தியமாகும், அந்தளவு தூரம் இவர்கள் தரவுகளை திரிபுபடுத்தி பொய்யான கணக்குகளை இணைத்துள்ளனர்.
இன்று நாட்டிற்கு முதலீடுகள் கிடைப்பதாக கூறுகின்றனர், நாட்டின் மனித உரிமைகள் பலப்படுத்தாது, ஒழுக்கம் சட்டம் முறையாக இல்லாது எந்தவொரு சர்வதேச முதலீட்டாளரும் வர மாட்டார்கள்.
அன்று எமது ஆட்சியில் நாட்டுக்கு வந்த முதலீடுகள் அனைத்தையும் விடுதலைப்புலிகளின் பணம் வருவதாக கூறினார்கள், இன்று அவர்களையே விமானங்களில் அழைத்து வரும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. நாம் முதலீட்டாளர்களை விமர்சிக்கவில்லை, ஆனால் பொய்களை கூறி மக்களை குழப்ப வேண்டாம்.
சர்வதேச ஒத்துழைப்பும், அதற்கான வேலைத்திட்டமும் அவசியம். மனித உரிமைகளை பலப்படுத்துவதன் மூலமே ஐரோப்பிய பொருளாதார சந்தையில் அங்கீகாரமும், அமெரிக்க ஒத்துழைப்புகளும் கிடைக்கும். அதனை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.