எம்.மனோசித்ரா
அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கைகளிலேயே உள்ளது. அடுத்த தேர்தல் எதுவாக இருந்தாலும் அதில் பெரும்பான்மை பலம் யாருக்கு என்பதை நிரூபிப்போம். இதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை மறுசீரமைத்து பலப்படுத்துவதற்கான வியூகம் வகுக்கப்படுவதாக சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
சுதந்திர கட்சியின் மீதான விமர்சனங்களுக்கு அரசாங்கத்திலிருந்து விலகுவதன் மூலம் பதிலடி கொடுப்பதை விட, அடுத்தடுத்த தேர்தல்களில் எடுக்கப்படும் தீர்க்கமான முடிவே முக்கியத்துவமுடையது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுதந்திர கட்சியின் மீதும் முன்னாள் ஜனாதிபதி மீதும் பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்படும் கடும் விமர்சனங்கள் தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை சுதந்திர கட்சியின் கைகளிலேயே உள்ளது. அடுத்தடுத்த தேர்தல்களை எதிர்கொள்வதற்காக தொகுதிகளுக்கு சென்று கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு எதிர்வரும் வாரங்களில் கூடவுள்ள மத்திய குழு கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை மீண்டும் பலப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளோம்.
இதே வேலை அடுத்த மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து களமிறங்குவது உறுதியென்றும் அதற்காக வேலைத்திட்டங்களையும் கட்சி முன்னெடுத்து வருவதாக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச மேலும் தெரிவித்தார்.