“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியில் நியமிக்கப்பட்டுள்ள நான்கு முஸ்லிம் உறுப்பினர்களில் ஒருவரான ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் குறித்த ஜனாதிபதி செயலணியில் இணைக்கப்பட்டமையை எதிர்த்து அவரை கொழும்பு மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்களின் சம்மேளன உறுப்பினர் மற்றும் பொருளாளர் பதவியிலிருந்தும் நீக்கியுள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் மாநகர சபை உறுப்பினர் நௌபர் மற்றும் செயலாளர் ஷரப்தீன் அலி ஆகியோர் தெரிவித்த செய்தியை SHORTNEWS இல் வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் தான் குறித்த சம்மேளனத்திலிருந்து நீக்கப்படவில்லை என “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியில் ஞானசார தேரருடன் இணைந்து பணியாற்றும் “ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின்” கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
SHORTNEWS க்கு கலீலுர் ரஹ்மான் அனுப்பிவைத்துள்ள அறிக்கை இதுதான்!
கொழும்பு மாநகர சபையின் முஸ்லிம் ஒன்றியத்தின் உறுப்பினர் பதவியில் இருந்தும் அதன் பொருளாளர் பதவியில் இருந்தும் நான் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது.
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசினின் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணியில் நானும் ஓர் உறுப்பினராக பதவி வகிப்பதன் காரணத்தால் தாமாகவே முன்வந்து பதவி விலகாமையினால் ஒன்றியத்தின் உறுப்பினர் பதவியில் இருந்தும் அதன் பொருளாளர் பதவியில் இருந்தும் நான் நீக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளப்பக்கங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
கொழும்பு மாநகர சபை முஸ்லிம் ஒன்றியத்தின் உறுப்பினர் பதவியிலிருந்தும் அதன் பொருளாளர் பொறுப்பில் இருந்தும் நான் நீக்கப்பட்டுள்ளதாக மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக முஸ்லிம் ஒன்றியத்தின் தலைவர் உட்பட 16 உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு நான் கேட்ட போது அவ்வாறான எந்த நடவடிக்கையையும் தாம் எடுக்கவில்லை என்றும் அது பற்றிய கலந்துரையாடல்கள் எங்கும் இடம் பெறவில்லையென்றும் திட்டவட்டமாக உறுதிப்படுத்தினார்கள்.
முஸ்லிம் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் எந்த ஓர் உறுப்பினரையும் மற்றுமொரு உறுப்பினரால் பதிவி நீக்க முடியாது என்பது மரபாகும். எனவே இதற்குப் புறம்பாக இவ்வாறு நான் பதிவி நீக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் உறுப்பினரொருவர் ஏனைய உறுப்பினர்களின் பெயர்களையும் பயன்படுத்தி சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி உத்தியோகபூர்வமற்ற செய்தி என்பதை அறிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இப்படிக்கு,
கலீலுர் ரஹ்மான்
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மற்றும்
கொழும்பு மாநகர சபை முஸ்லிம் ஒன்றியத்தின் பொருளாளர்
05.11.2021