(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
எனினும் இதனை நிராகரித்த சபாநாயகரும் ஆளுங்கட்சியும், சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக்கி அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட வைத்தபோது இவையெல்லாம் உங்களுக்கு விளங்கவில்லை என கேள்வி எழுப்பினர்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) செவ்வாய்க்கிழமை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சபை அமர்வுகள் கூடிய வேளையில், ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார : -சபாநாயகரினால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசன மாற்றங்களை மேற்கொள்ள முடியும். எதிர்க்கட்சி தரப்பின் முன்வரிசை ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் வேளையில் அதுரலியே ரதன தேரர் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகிய இருவரும் எதிர்கட்சியின் முன்வரிசையில் உள்ளனர்.
ஆனால் அவர்கள் எப்போதும் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். எதிர்கட்சியின் முன்னணி ஆசனங்களில் ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் இருவர் இருப்பது எதிர்கட்சிக்குள் ஒற்றர்கள் இருப்பது போன்றது. இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் இதே விடயத்தை முன்வைத்துள்ளோம். ஆனால் இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே இதற்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் தெரிவித்த சபாநாயகர் :- இந்த விடயம் அவர்களின் கட்சி சார்ந்த விவகாரமாகும். குறித்த கட்சிகள் எடுத்த தீர்மானங்கள் தொடர்பில் என்னால் தலையிட முடியாது என்றார்.