நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மத்திய மலைநாட்டில் கடும் மழை பெய்து வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும் கனியோன் லக்ஸபான நீரத்தேக்கங்களின் வான்கதவும் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நோட்டன் பிரிஜ் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீரத்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகளிலும் நீர் வான் பாய்கின்றன.
எனவே நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
சீரற்ற காலநிலையுடன் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பல பகுதிகளில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன. நீரோடைகள் நீர்வீழ்ச்சிகள் பெருக்கெடுப்பதனால் சில பிரதேசங்களுக்கு வெள்ளம் ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றன.
எனவே இப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக அட்டன் கொழும்பு, அட்டன் நுவரெலியா ஆகிய பகுதிகளில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து விழும் அபாயம் காணப்படுகின்றன.
எனவே இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மழையுடன் கடும் குளிரும் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ன. தேயிலைத் தோட்டங்களில் தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. அடிக்கடி பெய்துரும் மழை காரணமாக மலையக நகரங்களின் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மலையக நிருபர் சுந்தரலிங்கம்-