Our Feeds


Monday, November 15, 2021

ShortNews Admin

A/L அனுமதிக்காகச் சென்ற மாணவிகள் விபத்து - மாணவி ஒருவர் பலி, மற்றொரு மாணவிக்கு காயம்! - PHOTOS


 

(கரைச்சி நிருபர்)


கிளிநொச்சி ஊற்றுப்புலத்திலிருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றுக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சள் கடவையில் வீதியை கடந்தபோது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (15) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது.


கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலை ஒன்றில் கபொத சாதாரண தரம் கல்வி கற்ற மாணவிகள் மூவர் உயர்தரம் கல்விக்காக கிளிநொச்சியிலுலுள்ள பாடசாலை ஒன்றுக்கு அனுமதி பெறுவதற்காக பாடசாலைக்கு வருகை தந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஏ9 வீதியில் மேற்கு பக்கத்திலிருந்து பாடசாலை பக்கமாக மஞ்சள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது. அதனையடுத்து இதன் பின்னால் வந்த மின்சார சபை ஒப்பந்தக்காரர் ஒருவரின் வாகனமும் நிறுத்தப்பட்ட நிலையில் பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் மினசார சபை ஒப்பந்தக்காரரின் வாகனத்தை மோதியதில் இந்த வாகனம் பட்டா ரக வாகனத்துடன் மோதியது. இதனால் இரு வாகனங்களும் மாணவிகளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலயே 17 வயதான மாணவி உயிரிழந்ததுடன் மற்றொரு மாணவி காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »