Our Feeds


Monday, November 8, 2021

Anonymous

87 வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற இலங்கை பாட்டி - மிகவும் வயதான பட்டம் பெற்றவராக சாதனை.

 



இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த, ஏழு பேரப் பிள்ளைகளின் பாட்டியான வரதா சண்முகநாதன் (வயது 87) என்பவர், கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற மிக வயதான நபராக மாறியுள்ளார் என, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


“சுவாரஸ்யமாக இருந்தது. நவம்பர் முதலாம் திகதி, நான் ஒரு சாதாரண பெண்ணாக என் சாதாரண வாழ்க்கையைப் பற்றிக் கொண்டிருந்தேன். நவம்பர் இரண்டாம் திகதி, நான் பட்டம் பெற்றவுடன், எல்லாம் மாறிவிட்டது ”என்று வரதா சண்முகநாதன் சீஎன்என் செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.  


அன்றைய தினம் தான், ஒன்டாரியோவிலுள்ள பல்கலைக்கழகத்தில் மூத்த முதுகலைப் பட்டதாரி ஆனார் என்று யோர்க் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் குளோரியா சுஹாசினி தெரிவித்தார். 


சண்முகநாதனின் பட்டம், இலங்கையில் உள்நாட்டுப் போர் மற்றும் அமைதிக்கான முயற்சிகளில் கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


"அரசியலைப் படித்து அதில் உயர் பட்டம் பெற வேண்டும் என்பதே எப்போதுமே எனது கனவு, இறுதியாக அதை அடைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று அவர் கூறினார்.


இலங்கையில், வேலணை என்ற சிறிய கிராமத்தில் பிறந்த வரதா சண்முகநாதனின் முதல் முதுகலை பட்டம் இதுவல்ல. இந்தியாவில் உள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர், இந்திய வரலாறு மற்றும் ஆங்கிலத்தை கற்பிப்பதற்காக இலங்கை திரும்பினார்.


1990 இல், ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்பிப்பதற்காக லண்டனுக்குச் சென்றார் மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு மொழியியலில் தனது முதல் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.


2004 இல் கனடாவுக்குக் குடிபெயர்ந்த அவர், தனது மகளுடன் இருந்து இந்தப் பட்டத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »