Our Feeds


Sunday, November 28, 2021

ShortNews Admin

கயிற்றால் கட்டி பதப்படுத்தப்பட்ட 800 ஆண்டுகள் பழைமையான மம்மி கண்டுபிடிப்பு



இன்கா நாகரிக காலத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மம்மி ஒன்றை பெருவில் உள்ள அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


தலைநகர் லிமாவின் கிழக்கே உள்ள கஹமர்கீலா எனுமிடத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு நடத்தப் பயன்படுத்தப்பட்ட ஓரிடத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின்போது, பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கால மனித உடல் கிடைத்துள்ளது.

இன்கா நாகரிகத்தை ஆட்சி செய்த இன்கா பேரரசு 12ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இந்த மம்மி அதற்கும் முந்தையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மம்மி மண்ணுக்குள் புதைக்கப்பட்டு 800 ஆண்டுகள் முதல் 1200 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

புதைக்கப்பட்ட இந்த உடலுடன் சேர்த்து இறந்த நபர் விண்ணுலக வாழ்வில் பயன்படுத்துவதற்கான படையல்களாக பல பொருட்களும், உணவுப் பொருட்களும் புதைக்கப்பட்டு இருந்தன என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த மம்மியுடன் சேர்த்து அத்துடன் புதைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.

“இந்த மம்மியின் சிறப்பு என்னவென்றால், இதன் உடல் முழுவதும் கயிறால் சுற்றப்பட்டு உள்ளது. இறந்த நபரின் கையை வைத்து அவரது முகம் மறைக்கப்பட்டுள்ளது. இது அப்போது பின்பற்றப்பட்டு வந்த இறுதிச்சடங்குகளில் ஒரு வழக்கமாக இருந்திருக்கலாம் என்று இந்த அகழாய்வில் பங்கெடுத்த சான் மார்கோஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் வான் டேலன் லூனா தெரிவித்துள்ளார்.

இந்த மம்மியின் காலத்தை இன்னும் துல்லியமாகக் கண்டறிவதற்காக ரேடியோ கார்பன் டேட்டிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »