திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில்
பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்த படகுப் பாதை விபத்து தொடர்பில் கிண்னியா நகர சபை தலைவர் எஸ்.எச்.எம். நளீம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.கிண்ணியா பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர், விசாரணைகளினிடையே இவ்வாறு கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் ஐ.பி. ரஸாக் உத்தரவிட்டார்.
திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்த படகுப் பாதை விபத்து தொடர்பில் முன்னர் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் (24) உத்தரவிட்டது.
படகுப் பாதையின் உரிமையாளர், செலுத்துநர் மற்றும் கட்டணம் வசூலிப்பவர் ஆகிய 30,40,53 வயதுடைய மூவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.
கவனயீனமாக செயற்பட்டு 6 பேருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை மேலும் 20 பேருக்கு காயமேற்படுத்தியமை தொடர்பில் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்று முன்தினம் மாலை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அந்த மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் ஐ.பி. ரஸாக் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா, திருகோணமலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன பிரஹ்மனகேயின் வழி நடாத்தலில், கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் மேலதிக சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது நேற்று கிண்ணியா பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்ட நகர சபை தலைவர் நளீம், அங்கு வைத்து கைது செய்யப்பட்டார்.
இக்கைது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ,
‘ 6 பேரின் உயிரிழப்புக்கு காரணமான சம்பவத்துக்கு மறைமுகமாக நகர சபையின் தலைவர் உதவி ஒத்தாசை புரிந்துள்ளார். எந்தவிதமான பரிசோதனைகளும் இன்றி குறித்த படகுப் பாலத்தை நடத்திச் செல்ல அனுமதியளித்துள்ளார். இது குறித்த எந்த அவதானத்தையும் அவர் செலுத்தவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே சம்பவத்துடன் அவருக்கு குற்றவியல் பொறுப்பு சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டர்.’ என குறிப்பிட்டார்.
திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் கடந்த 23 ஆம் திகதி செவ்வாயன்று படகுப் பாதை கவிழ்ந்ததில், மூன்று வயதுக்கும் 8 வயதுக்கும் இடைப்பட்ட 4 சிறுவர்களும் 32 வயது பெண் ஒருவரும் 70 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்திருந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்திருந்தனர்.