Our Feeds


Tuesday, November 2, 2021

SHAHNI RAMEES

6 கோடி ரூபா பணத்துடன் சினிமா பாணியில் வேனை கடத்திய சாரதி கைது


 ஹட்டன் நகரில் வைத்து 6 கோடி ரூபா பணத்துடன் சினிமாப் பாணியில் வேனைக் கடத்திய சாரதியை, நேற்று மாலை விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.



ஹட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் வைபிலிடுவதற்காக கண்டியிலிருந்து தனியார் நிறுவனம் ஒன்றினால் கொண்டுவரப்பட்ட  பணமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.


குறித்த தனியார் நிறுவனமொன்றின் அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிடுவதற்காக நேற்று மதியம் வந்துள்ளனர்.


அதிகாரியும், பாதுகாப்பு ஊழியரும் வேனியில் இருந்து இறங்கியகையோடு, சாரதி வேனை செலுத்திக்கொண்டு பணத்துடன் தப்பிச்சென்றுள்ளார்.


நிறுவனத்தின் அதிகாரியும், பாதுகாப்பு ஊழியரும் அவரை பின்தொடர்ந்துள்ளனர். தலவாக்கலை - லிந்துலை வழியாக அம்பேவல பகுதிக்கு வேன் செல்வதை, தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து நுவரெலியா பதுளை பிரதான வீதியில் கெப்பட்டிபொல ரேந்தபொல பகுதியில் வைத்து நுவரெலியா விசேட அதிரடிப்படையினர் வேனை வழிமறித்து சாரதியை கைது செய்துள்ளனர்.


பின்னர் சாரதியையும், குறித்த பணத்தெகையையும், வேனையும் கெப்பட்டிப்பொல பொலிஸ் நிலையத்தில் வைத்து அட்டன் பொலிஸ் நிலையத்திற்கு கையளித்துள்ளனர்.


சந்தேக நபரையும், பணத்தொகையையும் ஹட்டன் பொலிஸாரால் இன்று (02.11.2021) அட்டன் நீதிமன்றத்தில், முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக நுவரெலியா விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »