வாட்ஸ்அப்பில் ‘குட் மார்னிங்’ செய்திகளைத் தொடர்ந்து அனுப்பிய அறிமுகம் இல்லாத நபரைச் சந்திக்க சென்ற 50 வயது நபரிடமிருந்து ரூபா 5 லட்சத்தை 3 மர்ம நபர்கள் ஏமாற்றி பறித்த சம்பவமொன்று பெங்களூருவில் இடம்பெற்றுள்ளது.
பெங்களூரு, கோவிந்தபுரா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் படி “50 வயதுடைய நபர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து தொடர்ந்து ‘குட் மார்னிங்’ செய்திகளைப் பெற்று வந்துள்ளார். கடந்த ஒக்டோபர் 8 ஆம் திகதி, அந்த பெண் தனது இருப்பிடத்தையும் அவருக்கு அனுப்பியிருக்கிறார், அன்று இரவு வீரணபாளையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் அந்த பெண்ணை பார்க்கச் சென்றபோது, அந்த அறைக்குள் மொத்தம் மூன்று பேர் இருந்தனர்.
அப்போது அந்த மூன்று பேரும் தங்களை பொலிஸ் அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, இவரை போதைப்பொருள் கடத்தல்காரர் என்றும் குற்றம் சாட்டினார்கள். பிறகு அவரிடமிருந்து கடனட்டை, பணப் பை மற்றும் தொலைபேசியை பறித்துக்கொண்டு, அவரை அறைக்குள் பூட்டிவிட்டு ஹோட்டலை விட்டு தப்பிசென்றார்கள். அதன்பின்னர் ஐந்து பரிவர்த்தனைகளில் ரூபா 3,91,812 (இந்திய பெறுமதி) அவரது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மேலும் ரூபா 2 லட்சம் (இந்திய பெறுமதி) எடுக்கப்பட்டதாக அவருக்கு செய்தி வந்தது” என்று தெரிவிக்கப்பட்டது.
முறைப்பாடு வழங்கியவரின் தகவலின் அடிப்படையில், அவர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர், மற்ற இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், தப்பிச்சென்ற இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.