Our Feeds


Monday, November 22, 2021

SHAHNI RAMEES

பஜ்ஜட்டுக்கு எதிராக 4 MPக்களும் வாக்களிக்க வேண்டும் - ரிஷாதின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதிரடி!

 

பஜ்ஜட்டுக்கு எதிராக 4 MPக்களும் வாக்களிக்க வேண்டும் - ரிஷாதின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதிரடி!


அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீது இன்று (2021.11.22) நடைபெறவுள்ள வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் றிஷாத் பதியுத்தீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி றஹீம் மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகிய நால்வரும் முன்வைக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என, நேற்று  (2021.11.21) நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. 


இம்முறை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டமானது  நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியவசிய பொருட்களின் அபரிமிதமான விலை உயர்வினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு எந்த வகையிலும் நிவாரணமாக அமையவில்லை என்பதோடு, முன்வைக்கப்பட்டுள்ள இவ்வரவுசெலவுத் திட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினை, அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை, அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை, அபரிமிதமான பணவீக்கம் மற்றும் நாட்டில் தேவைப்படும் டொலர் ஒதுக்கீடுகள் இல்லாமை ஆகியவற்றுக்கு எவ்வித தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை. இதனால் எதிர்காலத்தில் நாட்டில் பாரிய உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் காணப்படுவதோடு நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் என்ற அச்சமும் காணப்படுகிறது.


'ஒரு நாடு ஒரு சட்டம்' என்ற அரசாங்கத்தின் கொள்கை அடிப்படையில்  அவசரமாக உருவாக்கப்பட்ட செயலணிக்கு ஏக இறைவனான அல்லாஹ்வை ஈஸ்டர் குண்டு தாக்குதலின் சூத்திரதாரி என்று குறிப்பிட்டவரும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி; ஆணைக்குழு குற்றவாளியாக பெயர் குறிப்பிடப்பட்டவரும், நீதிமன்ற அவமதிப்பின் பேரில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை பெற்றவருமான ஒரு மதகுருவை நியமித்ததினால்  இன்று வரை நமது நாட்டுக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கி வந்த உலக முஸ்லிம் நாடுகளினதும், ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட ஏனைய உலக நாடுகளினதும் நம்பிக்கையை இந்த அரசாங்கம் இழந்து நிற்கின்றது. இதனால் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நிவர்த்திக்கும் வகையில் நாட்டுக்கு தேவைப்படும் அவசியமான உதவிகளை சர்வதேச சமூகத்திடம் இருந்து பெறமுடியாத கையறு நிலையை நோக்கி இந்த அரசாங்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது. 


இருபதாவது திருத்தச் சட்டத்தின் மூலம் பாராளுமன்றத்திற்குரிய பெரும்பாலான அதிகாரங்களை ஜனாதிபதி தன்வசப்படுத்தியிருந்த போதிலும், கொவிட் - 19 தொற்றினை கட்டுப்படுத்த தவறியமை, கொவிட் - 19 காரணமாக மரணித்த ஜனாசாக்களை உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக்கு எதிராக வேண்டுமென்றே பலவந்தமாக எரித்தமை, நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அச்சமான அசாதரண சூழலால் முழு நாட்டு மக்களும் நிம்மதி இழந்த நிலையில் காணப்படுகின்றமை, இளைஞர்கள், புத்திஜீவிகள், வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்ற முயற்சியில் ஈடுபடுகின்றமை என்பன நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

 

கட்சியின் இன்றைய அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதற்கான நியாயங்களை முன்வைத்து கருத்துக்களை தெரிவித்ததன் அடிப்படையில், எதிர்வரும் 2021.11.22ஆம் திகதி பாராளுமன்றில் நடைபெறும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பிலும், இறுதி வாக்கெடுப்பிலும் வரவுசெலவுத் திட்டத்தினை எதிர்த்து வாக்களிப்பதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகார சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளதோடு, வாக்கெடுப்பின் பின்னரான விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்றைய அரசியல் அதிகார சபைக் கூட்டம், இன்று  2021.11.22 இரவு 08 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »