ஆப்கானிஸ்தான் நாட்டில் தினமும் நடக்கும் குண்டுவெடிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் காரணமாக அங்கு கடுமையான உணவுப் பஞ்சம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 32 இலட்சம் குழந்தைகள் எதிர்காலத்தில் ஊட்டச் சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்படுவர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள் பலருக்கு சம்பள தொகை நிலுவையில் இருப்பதன் காரணமாக தாலிபான்கள் ஆட்சியில் மருத்துவமனையில் சிகிச்சைகள் சரியாக வழங்கப்படவில்லை. ஆப்கானிஸ்தான் மருத்துவமனைகளுக்கு எரிபொருட்கள் சரியாக வழங்கப்படுவதில்லை. இதன்காரணமாக அம்பியூலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் மீசல்ஸ் உள்ளிட்ட நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதால் 24,000இற்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலிபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் சுகாதாரத்துறை படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் நிலைமையை சமாளிக்காவிட்டால் எதிர்காலத்தில் பல குழந்தைகள் இதனால் மரணமடைய நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.