விலை அதிகரிக்கப்பட்டு சமையல் எரிவாயு விற்பனை இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
நாட்டில் தற்பொழுது சமையல் எரிவாயுவுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் எரிவாயு சிலிண்டரின் விலை 2500 ரூபா முதல் 3500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக நுகர்வோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு, இவ்வாறு விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதன் பின்னணியிலும் பெரும்பாலான இடங்களில் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அறியமுடிகிறது.
இதேவேளை, லிட்ரோ எரிவாயு அடங்கிய கொள்கலன் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், விரைவில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலை நீங்கும் எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் தேஷர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறைந்த விலைக்கு எரிவாயு விற்பனை செய்யக்கூடிய சாத்தியங்கள் இருந்தும் நிதி அமைச்சின் தலையீட்டுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையினால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய நேரிட்டுள்ளது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் நலின் சமந்த தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் ஒரு மெற்றிக் தொன் எடையுடைய எரிவாயு 600 டொலருக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஓமான் டிரேடின் என்னும் நிறுவனத்திடம் கையொப்பம் செய்துகொண்டமையால் 800 டொலருக்கு கொள்வனவு செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எரிவாயு பற்றாக்குறை காரணமாக உணவு தயாரிக்க முடியாமல் நேற்று (07) பிற்பகல் சில ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.