செய்யாத குற்றத்திற்காக தண்டனை பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த நபரை 24 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை செய்து வடக்கு கரோலினா கவர்னர் உத்தரவிட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் 1995ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் 33 வயதான ஜார்ஜ் ராட்க்ளிஃப் என்பவரைக் கொலை செய்ததாக 19 வயதான டாண்டே ஷார்ப் என்பவர் குற்றம்சாட்டப்பட்டார்.
ஜார்ஜ் ராட்க்ளிஃப்பை ஷார்ப் கொலை செய்ததை நேரில் கண்டதாக 15 வயது சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஷார்ப் கைது செய்யப்பட்டார். தன் மீதான குற்றத்தை ஷார்ப் மறுத்தாலும் அப்போதைய விசாரணையில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இருப்பினும் தன் மீதான குற்றத்தை முறையாக விசாரிக்கவும், தான் நிரபராதி எனவும் கூறி ஷார்ப் மேல்முறையீடு செய்தார். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொலைக் குற்றத்தை நேரில் கண்டதாகத் தெரிவித்த சிறுமி சம்பவம் நடைபெற்ற இடத்தில் இல்லை என்பது தெரியவந்தது.
முக்கிய சாட்சியான சிறுமியின் வாக்குமூலம் ஆதாரமற்றது என்பதை அறிந்த நீதிமன்றம் ஷார்ப்பை கடந்த 2019ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவித்தது.
செய்யாத குற்றத்திற்காக 24 ஆண்டுகள் சிறையில் கழித்த ஷார்ப்பிற்கு ஆதரவாக பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் வீதியில் இறங்கின. தவறான தீர்ப்பிற்காக ஷார்ப்பிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என குரல்கள் ஒலிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் செய்யாத குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஷார்ப் இழப்பீடு பெறுவதற்கு தகுதியானவர் எனத் தெரிவித்த வடக்கு கரோலினா கவர்னர் ராய் கூப்பர் இழப்பீட்டு தொகை கோரி ஷார்ப் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
7 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வரை ஷார்ப் இழப்பீட்டு தொகைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ள ராய் கூப்பர், “ செய்யாத குற்றத்திற்காக ஷார்ப் தவறாக குற்றம்சாட்டது அநீதியானது” என தெரிவித்துள்ளார்.
தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறையில் அப்பாவிகள் உள்ள வரை எனது விடுதலை முழுமை பெறாது என ஷார்ப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.