Our Feeds


Monday, November 22, 2021

SHAHNI RAMEES

அனுமதியின்றி சேவையில் நிரந்தரமாக்கப்பட்ட 214 பணியாளர்கள்...

 

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் 10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு 2018ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்ட 214 பணியாளர்கள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி இன்றி சேவையில் நிரந்தரமாக்கப்பட்டிருப்பதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) தெரியவந்தது.

அமைச்சரவை அனுமதியின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் இவர்கள் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டபோதும், அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு அமைய இவர்களை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இங்கு புலப்பட்டது.

குறிப்பிட்ட திட்டமொன்றுக்காகப் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி இன்றி இவ்வாறு சேவையில் நிரந்தரமாக்குவதில் பாரிய தவறு இழைக்கப்பட்டிருப்பதாகவும், இது ஏனைய அரசாங்க நிறுவனங்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அமைகிறது என்றும் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

எனவே, இது தொடர்பில் அமைச்சின் மட்டத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு முழுமையான அறிக்கை ஒரு மாத காலப்பகுதிக்குள் குழு முன்னிலையில் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த நிலைமையைத் திருத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க அவர்களுக்கு கோப் குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் 2017, 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயற்றிறன் அறிக்கை குறித்து கடந்த 17ஆம் திகதி பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு ஆராய்ந்திருந்தது. இதன்போதே இவ்விடயங்கள் தெரியவந்தன.

1972ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க காணி மறுசீரமைப்புச் சட்டத்துக்கு அமைய அமைக்கப்பட்ட காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் ஊடாக காணிகளைக் கையகப்படுத்தும் போது கையகப்படுத்தப்பட்ட காணிகள் மற்றும் அந்தந்த அரசாங்கங்களின் காலப் பகுதிகளில் அப்புறப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பில் சரியான தகவல்கள் இல்லாமை பாரிய பிரச்சினை என கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதுவரை ஏறழத்தாழ 17 இலட்சம் ஏக்கர் காணிகள் ஆணைக்குழுவிடம் காணப்படுவதாகவும், இவற்றின் மதிப்பு துல்லியமானதாக இல்லையென்பதும் இங்கு தெரியவந்தது. காணிகளைக் கையகப்படுத்தும்போதும், பல்வேறு அரசுகளின் கீழ் காணிகளைப் பெற்றுக்கொள்ளும்போது சரியான முறையில் அளவிடல் பணிகள் மேற்கொள்ளப்படாமை இந்நிலைமைக்குக் காரணம் என காணி அமைச்சின் செயலாளர் இங்கு தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் பிரதான சொத்துக்களான இந்தக் காணிகள் தொடர்பில் சரியான தகவல்களும், மதிப்பீடுகளும் ஆணைக்குழுவிடம் இருப்பது அவசியமானது என்றும், காணிகளை சரியான முறையில் அளவீடு செய்து, அதுபற்றிய திட்டவட்டமான அடிப்படை ஆவணத்தைத் தயாரிப்பது அவசியம் என்றும் குழு சுட்டிக்காட்டியது. இது சம்பந்தமாக. நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரைவான வேலைத்திட்டத்தை தயாரித்து கோப் குழுவிற்கு அறிவிக்குமாறு அதன் தலைவர் அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த நிலங்களின் தரவுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. இதன் மூலம் பல்வேறு முறைகேடுகள் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என சுட்டிக்காட்டிய குழு, செயலாளரிடம் உடனடியாக தலையிடுமாறு பணிப்புரை விடுத்தது.

காணி கையகப்படுத்தல் தொடர்பான சில கோப்புகள் காணாமல் போயுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இது போன்று கிட்டத்தட்ட 200 கோப்புகள் காணாமல் போனது தெரியவந்தது. இது தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு அமைச்சின் செயலாளருக்கு கோப் குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார். பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட காணிகளிலிருந்து உரிய பலனைப் பெற்றுக் கொள்ள வினைத்திறனான முறையில் பயன்படுத்துவதற்குப் பதிலாக அவற்றை தனிநபர்களுக்கு வழங்குவது பாரிய பிரச்சினையென்றும், இதனைச் சீர் செய்வது அவசியமானதாகும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் 1972-1974ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணி மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குத் திட்டங்கள் மற்றும் சாற்றுதல் சமர்ப்பிக்கப்படாமை காரணமாக 50 ஏக்கர் காணிகளை வழங்காத 260 காணிகள் காணப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது. இதனால் 50 வருடங்களாக காலதாமதமடைந்திருக்கும் இந்தச் செயற்பாடு வரலாற்றுப் பிரச்சினையாக இருப்பதால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விசேட வழியொன்றை ஏற்படுத்த உரிய தலையீட்டை வழங்குமாறும் கோப் குழுவின் தலைவர், அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

ஆணைக் குழுவின் வசம் உள்ள ஏறத்தாழ 17 இலட்சம் காணிகள் தொடர்பில் பல வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுக்கு அமைய அவற்றின் பெறுமதி 676 மில்லியன் ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு தற்போதைய காலத்துக்கு ஏற்ப சீர் செய்யப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த நிலையில் ஒரு ஏக்கரின் பெறுமதி சுமார் 500 ரூபாவாக உள்ளதால், இப்பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கையை ஆறு மாதங்களுக்குள் மேற்கொள்ளுமாறும் குழு பரிந்துரைத்தது.

அத்துடன், ஆணைக்குழுவினால் காணிகள் குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னர் அந்தக் காணிகளை வங்கிகளில் அடகு வைத்து கடன் பெறுவது சிக்கலானது என்றும் இங்கு தெரியவந்தது. அத்துடன், சில காணிகள் பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் பயனுள்ள வகையில் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

ஆணைக்குழுவின் வசமுள்ள பெறுமதியான காணிகளை அடையாளம் கண்டு அவற்றைப் பயனுள்ள விதத்தில் அபிவிருத்தி செய்வதற்கான மாதிரியைத் தயாரிப்பதே தற்போதைய அவசர தேவை என கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இது தேசிய முக்கியத்துவம் மிக்கது என்பதால் நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினருடன் இணைந்து உரிய வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்காக மீண்டும் ஒருமுறை குழு முன்னிலையில் அழைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இரான் விக்ரமரத்ன, நளின் பண்டார, மதுர விதானகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »