Our Feeds


Tuesday, November 9, 2021

SHAHNI RAMEES

அடுத்த வருட இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பலம்வாய்ந்த சக்தியாகத் திகழும் - இயன் பிஷப்



அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை பலம்வாய்ந்த சக்தியாகத் திகழும் என கிரிக்கெட் வர்ணனையாளரும் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னான் கிரிக்கெட் வீரருமான இயன் பிஷப் தெரிவித்தார்.


தற்போதைய இலங்கை அணியினருக்கு தேவையான சகல வளங்களையும் வழங்கும் அதேவேளை அவர்களுக்கு சரியான வழிநடத்தல்கள் அவசியம் என அவர் கூறினார்.


ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது வீரகேசரி நடத்திய பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.


இலங்கை அணியில் நீண்ட காலம் பிரகாசிக்கக் கூடிய வீரர்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வனிந்து ஹசரங்க டி சில்வா, மஹேஷ் தீக்ஷன ஆகிய இருவரும் எதிரணிகளுக்கு சவால் விடுக்கக்கூடிய அதிசிறந்த சுழல் பந்து வீச்சாளர்கள் என்றார்.


'வனிந்து ஹசரங்க, மஹேஷ் தீக்ஷன ஆகியோருடன் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமிரவும் பந்துவீச்சில் மிகத் திறமையாக செயற்பட்டார். அதேபோன்று இளம் துடுப்பாட்ட வீரர் சரித் அசலன்க, பெத்தும் நிஸ்ஸன்க ஆகிய இருவரிடமும் சிறந்த ஆற்றல்கள் இருக்கின்றன. 


இலங்கை துடுப்பாட்டத்தில் அசலன்க, நிஸ்ஸன்க ஆகிய இருவரும் இரண்டு சொத்துக்களாக விளங்குகின்றனர். இந்த வீரர்களுடன் மற்றைய வீரர்களை மிகக் கவனமாக வழிநடத்தப்படுவது அவசியம். அதன் மூலம் இலங்கை அணி திறமைமிக்க ஒன்றாக மாறும்' என இயன் பிஷப் குறிப்பிட்டார்.


'கடந்த காலங்களில் இலங்கை அணி சிரமங்களையும் சிக்கல்களையும் எதிர்கொண்டுவந்தது. ஆனால், கடந்த ஓரிரு மாதங்களில் இலங்கை அணியில் பெரு முன்னேற்றத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது.


இலங்கை அணி கடைசி இரண்டு போட்டிகளில் மிகத் திறமையாக விளையாடியது. இங்கிலாந்துக்கு கடும் சவாலாக விளங்கிய இலங்கை, கடைசிப் போட்டியில் நடப்பு சம்பியன் மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டது.


கடைசிப் போட்டிக்கு முன்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் குறைநிறைகளை நன்கு ஆராய்ந்து அதற்கேற்ப திட்டங்களை வகுத்து விளையாடியமை இலங்கை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது. அதற்கு முன்னரான போட்டிகளிலும் இலங்கை இதனை பின்பற்றியிருக்கவேண்டும். 


அது அவர்களுக்கு சாதகமான பெறுபேறுகளைக் கொடுத்திருக்கும். 'சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தற்போதைய அணிகளுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றப் பாதையில் செல்லக்கூடிய அணியாக இலங்கை திகழ்கின்றது என்பதை நான் ஆணித்தரமாகக் கூறுவேன்.


வீரர்களின் வயது, அவர்களிடம் காணப்படும் ஆற்றல்கள், ஆர்வம் என்பன அதற்கான சான்றுகளாக அமைகின்றன. வீரர்கள் பொறுப்புணர்வு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகியவற்றுடன் தொடர்ந்து விளையாடினால், எதிர்காலத்தில் மிகவும் சவால்மிக்க அணியாக இலங்கை விளங்கும் என்பதை எவ்வித தயக்கமும் இன்றி கூறுவேன்' என 54 வயதான இயன் பிஷப் குறிப்பிட்டார்.


ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை அணி வெளிப்படுத்திய ஆற்றல்கள் பாராட்டுக்குரியது என இரண்டு தடவைகள் இருபதுக்கு 20 உலகக் கிண்ண சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளுக்கு தலைமை தாங்கிய டெரன் செமி தெரிவித்தார்.


மேற்கிந்திய தீவுகளுடனான கடைசிப் போட்டியில் இலங்கை வீரர்கள் விளையாடிய விதம் தன்னை பிரமிப்பில் ஆழ்த்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


'அப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் சாதிக்கும் என்றே பலர் எதிர்பார்த்தனர். ஆனால், இலங்கை அணியினர் மிகத் திறமையாக திட்டமிட்டு, அதிரடி வீரர்கள் நிறைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஆட்டங்காணச் செய்தனர்.


துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய சகலதுறைகளிலும் இலங்கையின் ஆற்றல்கள் அற்புதமாக இருந்தது. இந்தத் திறமைகளை மேம்படுத்திக்கொண்டால் இலங்கை அணி தலைசிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கும்' என டெரன் செமி தெரிவித்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »