Our Feeds


Saturday, November 13, 2021

SHAHNI RAMEES

2022 வரவு-செலவு திட்டத்தில் வழமைக்கு மாறாக இடம்பெற்ற சம்பவங்கள்

 

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

சுதந்திர இலங்கையின் 76 ஆவது வரவு செலவு திட்டமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர்  சமர்ப்பிக்கப்படும்  இரண்டாவது மற்றும் நிதி அமைச்சர் பசில்  ராஜபக்ஷவின் கன்னி வரவு செலவு திட்டத்தை நேற்று பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.

பெரும் எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் 2 மணி்யளவில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு ஆரம்பித்து 4.35 மணியளவில் நிறைவுக்கு கொண்டுவந்தார். 

பாராளுமன்றம் நேற்று 2022 வருடத்துக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை சமர்ப்பிக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு கூடியது. 

பிற்பகல் 1,55மணிக்கு  அழைப்பு மணி ஒலிக்கப்பட்டு, 2 மணிக்கு சபாநாயகர் செங்கோலுடன் படைக்கல சேவிதரால் அக்கிராசனத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

ஆரம்ப நடவடிக்கைகளைத் தொடர்ந்து  அடுத்தவருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க  நிதி அமைச்சர் பசில்  ராஜபக்ஷவை சபாநாயகர் அழைத்தார். அதன் பின்னரே பசில் ராஜபக்ஷ் சபைக்குள் வந்து, வரவு செலவு திட்டத்தை வாசிப்பதற்கு ஆரம்பித்தார்.

பசில் ராஜபக்ஷவுக்கு ஆளும் தரப்பு வரவேற்பு

வரவு செலவு திட்ட அறிக்கைகளை உள்ளடக்கிய பையை கையில் ஏந்தியவண்ணம் அமைச்சர் சபைக்குள் வரும்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேசையில் தட்டியும் ஜயவேவா  கோசம் எழுப்பியும் வரவேற்றனர். என்றாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியாக ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.

ஜனாதிபதி சபைக்கு வருகை

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க ஆரம்பித்து சில நிமிடங்களில் ஜனாதிபதி சபைக்குள் வந்தார். ஜனாதிபதியையும் ஆளும் தரப்பினர் கரகோசம் மற்றும் ஜயவேவா தெரிவித்து வரவேற்றனர்.

சபைக்கு தாமதித்து வந்த முக்கிய உறுப்பினர்கள்

நிதி அமைச்சர் வரவு செலவு திட்டம் சமர்ப்பித்து வாசிப்பதற்கு முன்னரே ஆளும் கட்சி உறுப்பினர்கள் தங்கள் ஆசனங்களுக்கு வந்து அமர்ந்திருந்தனர். என்றாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களில் குறிப்பிட்ட சிலரே ஆரம்ப நேரத்தில் ஆசனங்களில் இருந்தனர். 

ஏனைய உறுப்பினர்கள் மந்தகதியிலேயே ஒருவர்  உருவராக சபைக்கு வந்தனர். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜீத் பிரேமதாச மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்படு சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னரே சபைக்குள் வந்தனர். அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சற்று தாமதித்தே சபைக்குள் வந்ததை காணக்கூடியதாக இருந்தது. அத்துடன் அமைச்சர் விமல் வீரவன்ச சபைக்கு வந்திருக்கவில்லை. அவர் வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாகவே தெரியவருகின்றது.

வழமைக்கு மாறாக இடம்பெற்ற சம்பவங்கள்

என்டிஜன் பரிசோதனை

கொவிட் தொற்று அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருவதால் வரவு செலவு திட்டத்துக்கு பாராளுமன்றத்துக்கு வருகை தந்த அனைவரும் என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது பாராளுமன்ற சேவையில் இருக்கும் பொலிஸார், அமைச்சுக்களில் பணி புரியும் ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் என பலதரப்பினரும் காலை முதல் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பாராளுமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

விருந்தினர்கள்

புதிய வருடத்துக்கான வரவு செலவு திட்ட வாசிப்பு இடம்பெறும் போது பாாரளுமன்ற கலரியில் விசேட விருந்தினர்கள் அரச உயர் அதிகாரிகள், மாகாண ஆளுநர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு வெளிநாட்டு தூதுவர்கள் மாத்திரம் அழைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் அச்சு ஊடகவியலாளர்கள் மாத்திரம் கலரிக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இலத்திரியல் மற்றும் புகைப்பட ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

சமிக்ஞை மொழியில் காட்டப்பட்ட வரவு செலவு திட்ட அறிக்கை

அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் நிதி அமைச்சரால் வாசிக்கப்படும்போது, செவிப்புலன் அற்றவர்களின் நன்மை கருதி சமிக்ஞை மொழியில் வரவு செலவு திட்ட உரை மொழிபெயர்க்கப்பட்ட இந்த முறை வரவு செலவு திட்டத்தின் விசேட அம்சமாகும்.

10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து வாசித்துக்கொண்டிருக்கையில் 3.25 மணியளவில் அவருக்கு ஏற்பட்ட கலைப்பின் காரணமாக சிறிது நிமிடம் நேரம் கேட்டு ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். பின்னர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க அனுமதி கேட்டு, அமர்ந்தவண்ணம் வாசிக்க ஆரம்பித்தார். இதன்போது அவருக்கு படைக்கல சேவிதர் மாத்திரை கொண்டுவந்து கையளித்ததும் அதனை அருந்திவிட்டு தொடர்ந்து வாசித்தார்.என்றாலும் நிதி அமைச்சர் மிகவும் சிறமத்துடன் வாசிப்பதை உணர்ந்த சபாநாயகர் சபையை 10நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக  அறிவித்து 3,25மணிக்கு சபையை ஒத்திவைத்தார்.

அதனைத்தொடர்ந்து  பாராளுமன்றம் மீண்டும் 4.5 மணிக்கு ஆரம்பித்ததும் நிதி அமைச்சர் தொடர்ந்து வரவு செலவு திட்டத்தை வாசிக்க ஆரம்பித்தார்.

இரண்டரை மணி நேரம்வரை நீடித்த வரவு செலவு திட்ட உரை

அடுத்த வருடத்துக்கான வரவு செலவுதிட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிற்பகல் 2 மணிக்கு சமர்ப்பித்து வாசிக்க ஆரம்பித்து பிற்பகல் 4.35 மணிக்கு முடித்துக்கொண்டார். இதற்கிடையில் 25 நிமிடம் வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிரகாரம் சுமார் 2 அரை மணிநேரத்தில் 2021ஆம் ஆண்டுக்கான முழு வரவு செலவு திட்டத்தை பிரதமர் சமர்ப்பித்தார். என்றாலும் வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்தின் கொள்கை திட்டத்தை அவர் வாசிக்காமல் அதனை சபைக்கு சமர்ப்பித்தாக தெரிவித்து, வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி செலுத்தி முடித்துக்கொண்டார்.

இறுதியாக சபாநாயகர் சபையை வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்துக்காக இன்று காலை 9.30மணிவரை ஒத்துவைத்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »