கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று திங்கட்கிழமை 29.11.2021
13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எம்.நெளபரினால் 2022 ஆம் ஆண்டுக்கான ஓட்டமாவடி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் இன்று முன் வைக்கப்பட்ட போது சபையின் 18 மொத்த உறுப்பினர்களில் 13 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்து நிறைவேற்றினர்.
சபையின் இவ் வரவு செலவுத்திட்டத்தில் வீதி அபிவிருத்தி வடிகாலமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்கள், கிராமிய நீர்வளங்கள் திட்டங்கள், நகர அழகுபடுத்தல், நூலக அபிவிருத்தி உள்ளிட்ட கல்வி, கலை கலாசார, சுகாதாரம் மற்றும் பல்வேறு மக்கள் நல வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பிலான சுயேற்சை கட்சி பிரதேச சபை கௌரவ உறுப்பினர்களான எம்.எம். கனீபா, எம்.ஐ.மாஜிதா, எம்.பி.சித்திஜெஸீமா ஆகியோரும் தமிழர் விடுதலைக் கூட்டணி கௌரவ பிரதேச சபை உறுப்பினர் வை.யோகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு கௌரவ பிரதேச சபை உறுப்பினர் த.கிருபைராசா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதேச சபை கௌரவ உறுப்பினர் எம்.ரீ.எம்.பைரூஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி சார்பிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சபை கௌரவ பிரதித்தவிசாளர் ஏ.ஜீ.அமீர், கௌரவ முன்னால் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி மற்றும் கௌரவ உறுப்பினர்களான மூ.கிருபநாதன்,எம்.பி.ஜெளபர்,எம்.பி.ஜெமிலா,ஏ.எல்.ஜெஸ்மீன் பீவி தவிசாளர் ஏ.எம்.நெளபர் உட்பட 13 பிரதேச சபை உறுப்பினர்களால் இவ் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இவ் வரவு-செலவுத் திட்டத்திற்கு பிரதேச சபை கௌரவ உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் நடுநிலைமை வகித்ததாக தெரிவித்தார். நான்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மாத்திரம் இதற்கு ஆதரவு அளிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்த அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் தவிசாளர் நன்றி தெரிவித்து கொண்டதுடன் சபையின் மக்கள் நல வேலைத்திட்டங்கள் அனைத்தும் இன,மத கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்கள் நலனை மாத்திரம் கருத்தில் கொண்டு முன்னொடுக்கப்படுமென தவிசாளர் ஏ.எம்.நெளபர் தெரிவித்தார்.