(எம்.எப்.எம்.பஸீர்)
புனித மரியாள் வீதி, வெலிசறை – மஹபாகே முகவரியைச் சேர்ந்த 16 வயதான மொஹம்மட் ரக்க்ஷான் அப்துல்லாஹ் எனும் மாணவனும் 47 வயதான அவரது தந்தை பெஸ்டியன் நெஸ்பிரகே சுரஞ்சித் சந்ரலால் எனும் மொஹம்மட் அப்துல் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.
விபத்தை ஏற்படுத்திய மாணவனுக்கு எதிராக மஹமாகே பொலிஸார், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை, அபாயகரமாக வாகனம் செலுத்தியமை, விபத்தை ஏர்படுத்தி ஒருவருக்கு மரணத்தை ஏர்படுத்தி நால்வருக்கு காயம் ஏற்படுத்தியமை, விபத்து ஒன்றை தடுக்காமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் தண்டனை சட்டக் கோவையின் 298,329,328 மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் 151(3),149(1),123(1) அ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அம்மாணவனின் தந்தைக்கு எதிராகவும், தண்டனைச் அட்டக் கோவையின் 298,329,328 ஆம் அத்தியாயங்கலின் கீழும், மோட்டார் வாகன சட்டத்தின் 298,123 (1) அ பிரிவின் கீழும் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பில் மன்றில் விடயங்களை முன்வைத்த பொலிஸார், குறித்த மாணவன் கே.எஸ். 4893 எனும் இலக்கத்தையடைய மென்டரோ ஸ்போர்ட்ஸ் – மிட்சுபிசி ரக சொகுசு ஜீப்பைச் செலுத்திச் சென்ற நிலையில் அது கட்டுப்பாட்டை இழந்து விபத்து சம்பவித்துள்ளதாக சுட்டிக்காட்டினர். இதனால் மரணமடைந்த நபருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது 16 வயது மகன் படுகாயமடைந்து தற்போதும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவின் சிகிச்சைபெற்று வருவதாக பொலிஸார் கூறினர்.
இதன்போது நீதிமன்றில் இந்த விபத்து தொடர்பில் தீவிர அவதானம் செலுத்திய நீதிவான், இந்த விபத்தானது பொல்காவலையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ரயில் – பஸ் விபத்தை ஒத்த விபத்தாக இதனை நினைவு கூர்ந்தார். இந்நிலையிலேயே தந்தை, மகன் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
முன்னதாக, பொலிஸாரின் தகவல் பிரகாரம், ‘ நேற்று முன்தினம் (4)முற்பகல் வேளையில், கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கி சொகுசு ஜீப் வண்டி பயணித்துள்ளது. இந்த ஜீப் வண்டியானது மஹபாகே பொலிஸ் பிரிவில் வைத்து, நீர்கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு கார், ஒரு முச்சக்கர வண்டி மற்றும் இரு மோட்டார் சைக்கிள்களை மோதியுள்ளது. சாரதியால் ஜீப் வண்டியை கட்டுப்படுத்த முடியாமல், அது பாதையை விட்டு விலகி எதிர்த்திசையில் வந்த வாகனங்களை இவ்வாறு மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஐவர் படுகாயமடைந்து, உடனடியாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 51 வயதான மஹபாகே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 வயதான மாணவன் ஒருவன் மிக கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார். ஏனைய மூவரும் சாதாரண சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மஹபாகே பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் ஜீப் வண்டியை செலுத்தியவர் 16 வயதான ஒருவர் என தெரிய வந்துள்ளது. அதன்படி அவரை கைது செய்த பொலிஸார், அவருக்கு ஜீப் வண்டியை செலுத்த சந்தர்ப்பமளித்த அவரின் தந்தையையும் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவருமே தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.