பேருவளை, மாகல்கந்த பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியொருவருடன் கைபேசியினூடாக நண்பராகி, கண்டி – தவுலுகல பிரதேசத்திலுள்ள
வீடொன்றுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகப்படுத்திய 32 வயதுடைய நபர் மற்றும் அவரின் தாய் ஆகியோா் பேருவளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.குறித்த சிறுமி வீட்டிலிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக அவரின் பெற்றோாினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பேருவளை பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அந்த விசாரணைகளுக்கமையவே குறித்த நபர் மற்றும் அவருடைய தாய் ஆகியோர் தவுலுகல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து நேற்று (28) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனா். இவர்கள் மேலதிக விசாரணைகளுக்ககாக பேருவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.
சிறுமியின் கைபேசிக்கு தவறிவந்த தொலைபேசி இலக்கத்தினூடாக, இவர்கள் இருவரும் மூன்று மாத குறுகிய காலத்தில் நண்பர்களாகியுள்ளதுடன் இந்த காலப்பகுதியில் இவர்கள் சந்தித்திருக்கவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆரம்ப காலத்தில் தொலைபேசியினூடாக நீடித்த இவர்களின் தொடர்புகளின் பின்னர் குறித்த நபர் கண்டி, தவுலுகலயிலிருந்து அவரின் தாயாருடன் மக்கொன பிரதேசத்துக்கு வந்து வாடகை வீட்டில் ஒரு இரவை கழித்துள்ளனா். அடுத்தநாள் காலை குறித்த சிறுமியை அவரின் பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்றுள்ளனா்.
சிறுமி கடந்த 25ஆம் திகதி குறித்த நபரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பேராதெனிய போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் இது உறுதிப்படுத்தப்படுள்ளதாகவும் பேருவளை பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
தற்போது சிறுமி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிறுவயது சிறுமி என்று அறிந்தும் குற்றம் செய்தமைக்காக குறித்த நபர் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நபரின் 70 வயதுடைய தாய் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.