Our Feeds


Saturday, November 13, 2021

ShortNews Admin

14 வயது சிறுமி படுகொலை - சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸ்



(எம்.எப்.எம்.பஸீர்)


ஏழு வயது சிறுமி ஒருவருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கச் சென்று காணாமல் போனதாக கூறப்படும் 14 வயதான பாடசாலை மாணவி தம்புள்ளை - கலோகஹ எல பகுதியில் பாலடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அக்கொலை தொடர்பிலான பிரதான சந்தேக நபர் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ளார்.


கடந்த ஒக்டோபர் 6 ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில், பிரதான சந்தேக நபராக கருதப்படும் விக்ரமசிங்க ஆரச்சிலாகே சுமேத வசந்த அல்லது பஹன் எனும் நபரே பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.


குருணாகல், மங்குலாகம, தொரட்டியாகெதர பகுதியை சேர்ந்த சந்தேக நபர், 35 வயதானவர் எனவும் 862495098 V எனும் தேசிய அடையாள அட்டையைக் கொன்டவர் எனவும் குறிப்பிடும் பொலிஸ் தலைமையகம் , அவரின் புகைப்படத்தையும் வெளியிட்டு அவரைக் கைது செய்ய உதவுமாறு பொது மக்களை கோரியுள்ளது.


அதன்படி சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591091 எனும் இலக்கத்துக்கோ தம்புள்ளை குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரியின் 0718593103 எனும் இலக்கத்துக்கோ அழைத்து தகவல் வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


தம்புள்ளை - கண்டளம டி.எஸ். சேனநாயக்க பாடசாலையில் 9 ஆம் தரத்தில் கல்வி பயிலும், தம்புள்ளை - அத்துபாரயாய பகுதியைச் சேர்ந்த புத்தினி பியுமாலி எனும் மாணவி கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


பொலிஸ் தகவல்கள் பிரகாரம், சடலமாக மீட்கப்பட்டுள்ள குறித்த மாணவி, கடந்த 6 ஆம் திகதி தம்புள்ளை - ஹல்மில்லேவ, ஹபரத்தாவல பகுதியைச் சேர்ந்த நன்கு பரீட்சயமான குடும்பம் ஒன்றின் 7 வயது சிறுமிக்கு பாடம் சொல்லிக்கொடுக்கவென அழைத்து செல்லப்பட்டுள்ளார். குறித்த சிறுமியும், அவரது சிறிய தந்தை என அறியப்படுபவருமான நபரும் மோட்டார் சைக்கிளில் வந்து இவ்வாறு குறித்த மாணவியை அழைத்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


பாடம் சொல்லிக் கொடுக்க சென்ற தனது மகள் மீள வீடு வந்து சேராததால், அது தொடர்பில் தேடிப் பார்த்த போது எந்த தகவலும் கிடைக்காததால், எச்.ஏ. சந்ரா ஜயசேகர எனும் தாய் தனது மகளை காணவில்லை என தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் கடந்த 8 ஆம் திகதி முறைப்பாடளித்துள்ளார்.


இந்த முறைப்பாடு தொடர்பில் தம்புள்ளை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.எஸ். கருணாதிலக உள்ளிட்ட குழு விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


இந்நிலையிலேயே, தம்புள்ளை - கலோகஹ எல பகுதியில் பாலடைந்த வீடொன்றிலிருந்து துர்வாடை வீசுவதாக தம்புள்ளை பொலிஸாருக்கு பொது மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.


பொலிஸார் அங்கு சென்று பார்த்த போது, யாரோ ஒருவரின் சடலம் கட்டில் மேல் கிடப்பது தெரியவரவே, அது தொடர்பில் தம்புள்ளை நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்து, நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.


இதன்போது தம்புள்ளை நீதிவான் எம்.ஏ. அமானுல்லாஹ் ஸ்தலத்துக்கு சென்று பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த பாலடைந்த வீட்டின் கட்டில் மேல் துணிகளால் சுற்றப்பட்டிருந்த 14 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


சடலத்தின் ஆடைகள் அனைத்தும் கலையப்பட்டிருந்ததாக பொலிசார் இதன்போது அவதானித்துள்ளனர்.


இந் நிலையில், குறித்த சிறுமியை அழைத்து சென்ற நபரை பொலிஸார் தேடிப் பர்த்த போதும் அவரும் அவர் மனைவியும், மகளும் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.


இவ்வாறான நிலையிலேயே பிரதான சந்தேக நபரைக் கைது செய்ய தற்போது பொது மக்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »