(எம்.எப்.எம்.பஸீர்)
தனது ஐந்து வயது உறவுமுறை சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 வயது சிறுவனை, சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தடுத்து வைக்க குளியாப்பிட்டிய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இணைய வழி ஊடாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் தமது பிள்ளைகள் தொடர்பில் விழிப்பாக செயற்பட்டு, அவர்களது நடத்தைகள் தொடர்பில் அவதானமாக இருக்காத பெற்றோர்கள் இவ்வாறான சம்பவங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என இந்த உத்தரவை பிறப்பித்து குளியாப்பிட்டிய நீதிவான் ஜனனி எஸ். விஜேதுங்க திறந்த நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
கடந்த 15 ஆம் திகதி பொலிஸாரால், இந்த சிறுவனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தான். இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளின்போது இந்த சிறுவன் தெரிவித்துள்ளதாவது,
‘ தனக்கு பாடசாலையின் சாதாரண தர மாணவர்கள் ஊடாக யூ டியூப் மற்றும் வயது வந்தவர்களுக்கு மட்டும் பார்க்க முடியுமான இணையத் தளங்களை பார்க்க முதலில் சந்தர்ப்பம் கிடைத்ததது. அவற்றை இணைய வழி கல்வி நடவடிக்கையின் இடையே பார்ப்பதற்கு மேலும் வாய்ப்பாக அமைந்தது.’ என தெரிவித்துள்ளான்.
இந்நிலையில் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியின் அதிகாரியிடம், தான் வீடியோ காட்சிகளில் பார்த்தவற்றை 5 வயது உறவுமுறை சகோதரியிடம் செயற்படுத்தி பார்த்ததாக தெரிவித்துள்ளான்.
இதேவேளை, துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி வைத்தியசாலையில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்.