Our Feeds


Wednesday, November 17, 2021

SHAHNI RAMEES

ஆர்ப்பாட்டங்களால் கொரோனா விளைவுகள் 10 நாட்களில் தெரியும்! -விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

 

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் செவ்வாயன்று இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டங்களின் பிரதி பலனை எதிர்வரும் 10 நாட்களின் பின்னர் உணர முடியும். ஆர்ப்பாட்டங்கள் மாத்திரமின்றி மத வழிபாடுகள் , ஏனைய வைபவங்கள் உள்ளிட்டவற்றுக்கான ஒன்று கூடல்களையும் தவிரத்துக் கொள்வதே தற்போது நாட்டுக்கு ஆற்றும் பாரிய சேவையாகும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் காணப்படும் கொவிட் -19 நிலைமையைக் கருத்திற் கொண்டால் எந்த வகையான மக்கள் ஒன்று கூடல்களுக்கும் அனுமதியளிக்க முடியாது. இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான ஒன்று கூடல்கள் இடம்பெற்றதால் பல பாடங்களைக் கற்றிருக்கின்றோம். அவ்வாறிருக்கையில் அபாயத்தை உணர்ந்தும் மீண்டும் பெருமளவான மக்கள் ஒன்று கூடியமை சுகாதார தரப்பினர் என்ற வகையில் எமக்கு கவலையளிப்பதாகவே உள்ளது.

நாம் இன்னமும் மிகவும் அபாய நிலைமையிலேயே இருக்கிறோம். எனவே மீண்டுமொரு முறை இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட முடியும் என்று கருத வேண்டாம். ஆர்ப்பாட்டங்கள் மாத்திரமின்றி மத வழிபாடுகள் ஏனைய வைபங்கள் உள்ளிட்டவற்றின் மூலமும் கொவிட் தொற்று பரவக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே இது போன்ற அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் விலகியிருப்பதே நாட்டுக்காக நாம் ஆற்றக் கூடிய சிறந்த சேவையாகும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »