ஒரு இறாத்தல் பாணின் விலை 100 ரூபா வரை அதிகரிக்காவிடின், பேக்கரி உரிமையாளர்களுக்கு இலாபம் கிடையாது என அனைத்து இலங்கை
பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.கோதுமை மாவின் விலை நேற்று முன்தினம் (27) முதல் 18 ரூபா 50 சதத்தினால் அதிகரித்துள்ள நிலையிலேயே, பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் கோதுமை மாவிற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், நாட்டில் கோதுமை மாவிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
நாடு முழுவதும் இரண்டு நிறுவனங்களினால் மாத்திரமே, கோதுமை மா விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளிலிருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான டொலர் தம்மிடம் கிடையாது என அந்த நிறுவனங்கள் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கை வரலாற்றில் இதுவரை இந்தளவிற்கு கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
பேக்கரி உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் தண்ணீரை தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, ஒரு இறாத்தல் பாணின் விலை 100 ரூபா வரை அதிகரிக்காவிடின், பேக்கரி உரிமையாளர்களுக்கு இலாபம் கிடையாது என அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான நிலையிலேயே, 450 கிராம் எடையுடைய பாணின் விலையை நேற்று நள்ளிரவு முதல் 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிடுகின்றார்.
நாட்டில் ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு விலைகளில் பாண் விற்பனை செய்யப்படுவதாக கூறிய அவர், அந்த விலையிலிருந்து இன்று முதல் 10 ரூபா அதிகரித்தே பாண் விற்பனை செய்யப்படும் எனவும் கூறினார்.
450 கிராம் எடை இருந்தால் மாத்திரமே அது பாண் இறாத்தல் எனவும், அதனை விட குறைவான எடை காணப்படுமாக இருந்தால், அது சட்டவிரோதமானது எனவும் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிடுகின்றார்.
பாண் தவிர்ந்த ஏனைய உணவுப் பண்டங்களின் விலைகள் 5 ரூபா முதல் 10 ரூபா வரை அதிகரித்தே இன்று (29) முதல் விற்பனை செய்யப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவிக்கின்றார்.