Our Feeds


Monday, November 1, 2021

ShortNews Admin

ஒரே நாடு ஒரே சட்டம் - செயலணியில் 03 முஸ்லிம்களையும் இணைத்திருக்கத் தேவையில்லை - ஞானசார தேரர் அதிரடி



(இராஜதுரை ஹஷான்)


ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளின் நியமனம் அவசியமற்றது. ஏனெனில் மூவின மக்களின் அரசியல் மற்றும் மதம்சார் பிரச்சினைகளை நாம் நன்கறிவோம். ஒரு சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் பிரதிநிதிகள் செயலணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தமிழ் உறுப்பினர்களை நியமனத்தில் சிக்கல் நிலை காணப்படுப்படுகிறது. அதாவது, கண்டியில் உள்ள ஒருவரை நியமிப்பதில் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் விரும்புவதில்லை.

ஆகவே எதிர்வரும் காலத்தில் செயலணியின் உறுப்பினர் நியமனம் பரிசீலனை செய்யப்படும். தமிழ் பிரநிதிகள் இல்லை என போர்க்கொடி தூக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இந்துக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கட்டாய மதமாற்றம் தொடர்பிலும், மதமாற்றம் தடைச் சட்டம் தொடர்பிலும் ஏன் இதுவரை கவனம் செலுத்தவில்லை.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்ரஸா பாடசாலை, காதி நீதிமன்றம்,புர்கா ஸரியா வங்கி முறைமை என பல்வேறுப்பட்ட விடயங்கள் பேசப்பட்டன. ஆனால் அவற்றுக்கு எதிராக சட்டங்கள் உருவாக்கப்படவில்லை.குறைந்தப்பட்சம் திருத்தம் செய்யவுமில்லை.

சிறுபான்மையினர் என் சொற்பதத்தை கூட பயன்படுத்துவதை விரும்பவில்லை. மாகாணம், இனம், மதம் என்ற வேறுபாடுகள் தேசிய ஒருங்கிணைப்புக்கு பிரதான தடையாக காணப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »