Our Feeds


Friday, October 29, 2021

Anonymous

SHORT_BREAKING: இலங்கை மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது சீனா!

 



(எம்.மனோசித்ரா)


இரு தரப்பினருக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறி கடன் அனுமதிப்பத்திரத்துக்கு ஏற்ப கொடுப்பனவு வழங்கப்படாமையின் காரணமாக  மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

தூதுரகத்தின் பொருளாதார மற்றும் சந்தை அலுவலகத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தீர்மானத்துக்கமைய இலங்கையுடன் முன்னெடுக்கப்படும் சர்வதேச ஒப்பந்தங்களின போது மக்கள் வங்கியினால் வெளியிடப்படும் கடன் அனுமதிப்பத்திரத்தை ஏற்றுக் கொள்வதை தவிர்க்குமாறும்  அபாயத்தை தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் சகல சீன  முயற்சியாளர்களுக்கும்  தெரியப்படுத்துவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

உர இறக்குமதி தொடர்பில் இரு தரப்பிற்கிடையில் எட்டப்பட்ட உடன்பாட்டுக்கமைய ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கடன் அனுமதிப்பத்திரத்துக்கு ஏற்ப கொடுப்பனவை வழங்குமாறு சீனாவின் குவின்ங்டாவோ சீவின் பயோடெக் குருப் நிறுவனம்’ மக்கள் வங்கியிடம் கோரியுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

வர்த்தக சட்ட திட்டங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக கொள்கைகளுக்கமைய மக்கள் வங்கி செயற்படாமையின் காரணமாக குறித்த கடன் அனுமதிப்பத்திரத்திற்கு உரிய கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் சீன நிறுவனத்திற்கு பாரதூரமான நஷ்டம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தில் அபாயமிக்க பற்றீரியாக்கள் காணப்பட்டமையால் அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பில் இரு நிறுவனங்களால் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய குறித்த சீன நிறுவனத்துக்கு கடன் அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொடுப்பனவுகளை வழங்காதிருப்பதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »