ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாத இறுதியில் பிரிட்டனுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஐ.நா வின் ஏற்பாட்டில் உலக காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு ஸ்கொட்லாந்து க்ளெஸ்கொவ் நகரில் நடைபெறவுள்ளது. இம்மாதம் 31 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விடுத்த அழைப்பினையேற்று ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளார்.
இதற்கிடையில், ஜனாதிபதி கோட்டாபய அங்கு தங்கியிருக்கும் நாட்களில் கடந்த காலங்களில் அரசுடன் நெருங்கிச் செயற்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் சந்திப்பொன்றை நடத்த ஜனாதிபதி தரப்பு ஏற்பாடுகளை செய்தது. ஆனால் அந்த தமிழ் அமைப்புகள் அதற்கு உடன்படவில்லையென அறியமுடிந்தது.
தமிழர் பிரச்சினை தீர்வு குறித்து கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இதர தமிழ் அரசியல் கட்சிகளுடன் பூர்வாங்க பேச்சுக்களை நடத்தாமல், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லையென மேற்படி அமைப்புகள் ஜனாதிபதி தரப்பிடம் சுட்டிக்காட்டியிருப்பதாக அறியமுடிந்தது.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரிட்டன் வருகைக்கு எதிர்ப்பினை வெளியிட்டு பிரிட்டனின் பல்வேறு இடங்களிலும் கடும் எதிர்ப்பை வெளியிட புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஏற்பாடுகளை செய்துவருவதாக மேலும் தெரியவந்தது.
(தமிழன்)