அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கி எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு ஆலோசனை நடத்திவருகிறது.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தனித்து களமிறங்க தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, இனிவரும் எந்த தேர்தல்களிலும் பொதுஜன பெரமுனவுடன் கூட்டுவைப்பதில்லையென்றும் முடிவு செய்துள்ளது.
விவசாயிகளின் உரப் பிரச்சினை, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு உட்பட்ட பல்வேறு பிரச்சினைகளை பகிரங்கமாக பேசவேண்டுமெனில் எதிர்க்கட்சி தரப்பில் இருக்கவேண்டுமெனவும் அதனால் அரசிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர சுதந்திரக்கட்சி மேல்மட்டத்தில் மந்திராலோசனைகள் நடத்தப்படுவதாகவும் அக்கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் நேற்றிரவு “தமிழன்” செய்திச் சேவையிடம் தெரிவித்ததாக குறித்த செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அரசிலிருந்து வெளியேறுவதாயின் இந்த ஆட்சியின் இறுதி வருடத்தில் வெளியேறவேண்டுமெனவும், முன்கூட்டி வெளியேறினால் அது அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துமெனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளதாக அறியமுடிந்தது.
எவ்வாறாயினும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விசேட அறிவிப்பை முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன விரைவில் வெளியிடுவாரென சொல்லப்பட்டது. (தமிழன்)