ஸ்கொட்லாந்து கிரிக்கட் அணியின் சீருடை ஹேடிங்டனைச் சேர்ந்த ரெபேக்கா டவுனி என்ற 12 வயது சிறுமியால் வடிவமைக்கப்பட்டதென ஸ்கொட்லாந்து கிரிக்கட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயிற்சி போட்டிகளில் விளையாடிய ஸ்கொட்லாந்து அணியின் சீருடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த சீருடையில் ஊதா, கறுப்பு நிற பட்டைகளைக் கொண்ட வடிவமைப்புடன், ஸ்காட்லாந்து நாட்டின் பெயர் முன்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது. கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், சீருடை வடிவமைப்பு பற்றிய தகவலை ஸ்கொட்லாந்து கிரிக்கட் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சீருடை வடிமைப்பு தொடர்பாக ஸ்கொட்லாந்து கிரிக்கட் நிர்வாகம் போட்டி ஒன்றை நடத்தியது. சுமார் 200 பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்ட இந்த போட்டியில், ரெபேக்கா டவுனி வடிவமைத்த சீருடை, அணி நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டது. ஸ்கொட்லாந்தின் தேசிய சின்னத்தில் உள்ள ‘திஸ்சில்’ எனப்படும் செடியின் நிறங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சீருடையை அவர் வடிவமைத்துள்ளார். அவரது வடிவமைப்பில் தயாரான முதல் சீருடை, அவருக்கே பரிசாகவும் வழங்கப்பட்டிருக்கிறது.