Our Feeds


Thursday, October 28, 2021

Anonymous

PHOTOS: குழந்தையை சுமந்து கொண்டு ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

 


பாருக் ஷிஹான்


6 மாதங்களாக எவ்வித தீர்வுகளும் இன்றி அலைக்கழிக்கப்படும் எமக்கு ஜனாதிபதியே நீதியை பெற்று தாருங்கள் என கண்ணீர் மல்கிய  நிலையில் வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அம்பாறை மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று (28)  ஒன்றுகூடிய 26 பல்நோக்கு அபிவிருத்தி செயலணித்திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்தனர்.

இதன் போது குறித்த போராட்டத்தில் கைக்குழந்தைகளுடன் பங்கு பற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீனவிடுமுறை போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு பல்வேறு சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பியதை காண முடிந்தது.

குடும்பங்களை சீர்குலைத்து பிள்ளைகளை நிர்க்கதியாக்காதே, மனிதாபிமானம் இல்லாத செயற்பாட்டை நிறுத்து , வேண்டாம் வேண்டாம் வெளி மாகாணம் வேண்டாம். அதிமேதகு ஜனாதிபதியே எங்களது பிரசச்சினையை கவனத்தில் எடுங்கள், சிங்கள மொழி தெரியாத எம்மை எமது மாவட்டத்தினுள் உள்வாங்கு, மேன்முறையீட்டு காலத்தை வழங்காமல் இழுத்தடிக்காதே,  பல்நோக்கு செயலணி திணைக்களமே எமது பிரச்சிணைக்கு தீர்வினை பெற்று தாருங்கள், என பல்வேறு வாசங்களை மும்மொழிகளிலும் ஏந்தி குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.


இந்த  போராட்டத்தில் ஈடுபட்ட வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 26 பேரும் கடந்த  நல்லாட்சி அரசாங்கத்தில் பட்டதாரி பயிலுநர்களாக இணைப்பு செய்யப்பட்டு 1.1.2021 அன்று நிரந்திர நியமனத்திற்கு உள்வாங்கப்பட்டிருந்தனர்.இவ்வாறு உள்வாங்கப்பட்ட 26 பேர் எதுவித நேர்முகப்பரீட்சை இன்றி 22.04.2021 அன்று இரவோடு இரவாக மத்திய மாகாணம் ஊவா மாகாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அறிக்கை இட வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

இவ்வாறு  வெளி மாவட்டத்திற்கு சென்ற 26 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் தங்குவதற்கு வசதி இன்றியும் மொழிப்பிரச்சினை காரணமாகவும் சிரமப்பட்ட நிலையில் மேன்முறையீட்டினை மேற்கொண்டனர்.இருந்த போதிலும் குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மேன்முறையீடுகள் ஏற்று கொள்ளப்படவில்லை. ஆனால்  ஏனைய திணைக்களத்தில் உள்வாங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களது மேன்முறையீடுகள் மறுபரிசீலணை மேற்கொள்ளப்பட்டு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த குறித்த பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களுக்கும் மேன்முறையீடு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அடிப்படை மனித உரிமையை மீறி நிர்வாகம்  செயற்படுவதாக குற்றம் சாட்டினர்.

இதுவரை மேன்முறையீடுகள் இடமாற்றம் குறித்த பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்கள நிர்வாகம் மௌனம் சாதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் பொறுப்பு வாய்ந்தவர்கள் இதற்கு  தீர்வினை பெற்று தர ஆவண செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு இல்லையேல் குறித்த போராட்டமானது தீர்வு  இல்லையேல் உண்ணாவிரத போராட்டமாக தொடர்ச்சியாக மேற்கொள்ள  தாங்கள் உத்தேசித்திருப்பதாக ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.

தற்போது மாகாணங்களுக்குள் இடையே அமுலில் உள்ள பொதுபோக்குவரத்து தடை காரணமாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் தற்காலிகமாக கையெழுத்துகளை மேற்கொண்டு வந்திருந்த நிலையில்  குறித்த போராட்டத்தை சுகயீன விடுமுறையை மேற்கொண்டு முன்னெடுத்தனர்.

மேலும் போராட்டத்தை தற்காலிகமாக முடித்து கொண்டு மனித உரிமை ஆணைக்குழு பிராந்திய அலுவலகத்திற்கு சென்று முறைப்பாட்டினை வழங்கியுள்ளனர்.

குறித்த பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் குறித்து எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை குரல்கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுடன் நுவரெலியா பதுளை மொனராகலை கண்டி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 26 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைப்பு செய்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »