எஸ்.றொசரியன் லெம்பேட், க. அகரன்
நீண்ட நாள்களின் பின்னர், நாட்டில் இன்றைய தினம் (21) முதல் பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 200 மாணவர்களுக்கு குறைவாக காணப்படுகின்ற பாடசாலைகள் இன்றைய தினம் முதல், கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்திலும் 200 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள 90 பாடசாலைகள் ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மாணவர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்ப நிலை காணப்படுவதால், இன்றைய தினம் (21) பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாக காணப்படுகின்றது.
பாடசாலைகளில் மாணவர்களுக்கான சுகாதார நடைமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார நடைமுறைகள் பின்பற்றி மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று வருகின்றனர்.
மேலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பாடசாலை தொடர்பாகவும் குறித்த பாடசாலைக்கு சமூகமளிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் புலனாய்வுத்துறையினர் நேரடியாக சென்று சேகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, வவுனியாவில் பல பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் திரும்பி சென்ற நிலையும் காணப்பட்டது.
வவுனியாவில், 85 பாடசாலைகள், இன்று திறக்கப்படும் என வலயக்கல்வி அலுவலகங்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை, பாடசாலைகள் பலவற்றின் முன் வாயிற்கதவு மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதன் காரணமாக, பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றிருந்தனர்.
இதேவேளை, சில பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்ற போதிலும், குறைந்தளவான மாணவர்களே வருகை தந்திருந்தனர்.