(ஆர்.ராம்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்கத்திற்கு தாரைவார்ப்பதற்கு விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அந்த நான்கு உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு ‘கூஜா’ தூக்கும் செயற்பாடுகளை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
வீரகேசரி பத்திரிகையின் சமகாலம் கருத்தாடற்களம் மெய்நிகர் நிழ்வில் கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எமது கட்சியின் நான்கு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்ததன் பின்னர் அதுபற்றிய பல்வேறு பேச்சுக்களை கட்சிக்குள் நடத்தியிருந்தோம்.
கட்சியின் தலைமையினதும், உயர்பீடத்தினதும், போராளிகளினதும் தீர்மானத்திற்கு மாறாக செயற்படக் கூடாது என்பதை வலியுறுத்திக் கூறியிருந்தோம். அதற்கு அந்த உறுப்பினர்களும் இணக்கம் கண்டனர்.
இதனைவிடவும், பாராளுமன்றக் குழுக் கூட்டங்களின் போது கட்சிக்குள் பிளவுகள் என்ற அபிப்பிராயம் ஆதரவாளர்களுக்கும், மக்களுக்கும் சென்று குழம்பங்களை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக பாராளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்புக்களின் போது வாக்களிப்பதற்கு இணக்கமில்லாது விட்டால் ஆகக்குறைந்தது அதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அவர்களை அறிவுறுத்தியிருந்தேன். அவர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்கள்.
ஆனாலும் புதிய நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் நிதிச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டபோது அவர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள்.
அதுபற்றி வினவியபோது, அவரினால் ஒதுக்கீடு செய்யப்படும் அபிவிருத்தி நிதிகள் தமக்கு கிடைக்காது போய்விடும் என்ற பீதியின் காரணத்தினால் வாக்களித்ததாக கூறுகின்றார்கள்.
இந்த உறுப்பினர்கள் முதலில் அபிவிருத்தி என்ற மாயையில் இருந்து வெளிவர வேண்டும். கிழக்கு மாகாணம் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் இந்த ஆட்சியாளர்கள் மீது மிகுந்த வெறுப் படைந்துள்ளார்கள்.
அவ்விதமாக இருக்கையில் ஆட்சியாளர்களுக்கு ‘கூஜா’ தூக்குவதை எம்மவர்கள் முதலில் நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் அவர்கள் அதற்குரிய விலையை நிச்சயம் கொடுக்க வேண்டி வரும்.
இந்த உறுப்பினர்களை அரசாங்கத்திற்கு தாரை வார்த்துவிடக்கூடாது என்பதற்காக நான் ஒழுக்காற்று நடவடிக்கை அல்லது கட்சியிலிருந்து அகற்றுதல் போன்ற கடுமையான தீர்மானங்களை இதுவரையில் எடுக்காது இருக்கின்றேன்.
ஆகவே இவர்கள் கள யதார்த்தத்தினை புரிந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான கட்சி என்பதை உணர்ந்து கொண்ட அதிகாரங்கள், அமைச்சுப்பதவிகளுக்கு சோரம் போகாது தற்போதுள்ள இரண்டும் கட்ட நிலையை கைவிட்டு முடிவொன்றை அவர்கள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.