வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டம் நேற்று(22) நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், இரா.சாணக்கியன் ஆகியோரை புலிகள் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வர்ணித்து கூச்சலிட்டதால் குழப்ப நிலைமை ஏற்பட்டது.
வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டம் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தலைமையில் நாடாளுமன்ற குழு அறையில் நேற்றுக் காலை ஆரம்பமானபோது, அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள எம்.பிக்களான சிறீதரன், சாணக்கியன் ஆகியோர் சென்றனர்.
மட்டக்களப்பு வாகரை பகுதியின் காரமுனை என்ற இடத்தில் இடம்பெறும் வன அழிப்பு குறித்து இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டுமென விடுக்கப்பட்ட முன்னறிவித்தல் குறித்து ஆராயுமாறு இந்த எம்.பிக்கள் அங்கு கேட்டுக்கொண்டனர்.
ஆனால் அங்கிருந்த ஆளுங்கட்சி எம்.பிக்கள் கொட்டியா, கொட்டியா, நீங்கள்தான் புலிகள், புலிகள் கொள்கையை முன்னெடுக்கும் அவர்களின் எச்சங்கள் என்றவாறெல்லாம் கோஷ மிட்டதையடுத்து மேற்படி எம்.பிக்கள் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் வெளியேறினர்.
இந்த சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று சபையில் உரையாற்றும்போது சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்ததுடன், இதுதொடர்பில் சபாநாயகர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.