Our Feeds


Friday, October 15, 2021

Anonymous

GI குழாய் வழக்கில் இருந்து பசில் ராஜபக்ஸ விடுதலை

 



அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோரை GI குழாய் வழக்கின் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இன்று உத்தரவிட்டார்.


சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரம் வாபஸ் பெறப்பட்டமையால், அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.


2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்காக திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2991 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி பயனாளிகளுக்கு கூரைத்தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை உள்ளிட்ட 05 குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாட் விடயங்களை முன்வைத்தார்.


பசில் ராஜபக்ஸ மற்றும் கித்சிறி ரணவக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் நால்வரும் சட்ட மா அதிபர் தாக்கல் செய்த வழக்கில் இருந்து கொழும்பின் மற்றுமொரு மேல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்கவினால் 2020 நவம்பர் மாதம் 30 ஆம் திகதி 8222 – 2016 ஆம் இலக்கத்தில் வழங்கப்பட்டுள்ள உத்தரவிற்கிணங்க, வழக்கின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்னகர்த்திச் செல்ல சட்டமா அதிபர் விரும்பாததால், குற்றப்பத்திரத்தை வாபஸ் பெறுவதற்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாட் நீதிமன்றத்தின் அனுமதியை கோரினார்.


இந்த ​கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே, பிரதிவாதிகளை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »